அடுத்து வந்தவர் இன்னொரு நண்பரின் சகோதரர். என்னை விட சில வருடங்கள் மூத்தவர்.. எனக்கு ஒரு விதத்தில் உதவியவரும் கூட. கம்பியூட்டர் துறை படிப்புகள் பிரபலம் அடையாத அந்தக் காலத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலை கணிதமும் அதைத் தொடர்ந்து கம்பியூட்டர் டிப்ளமாவும் படித்தவர். படித்து முடித்த ஓரிரு ஆண்டுகளிலேயே அப்பொழுதுதான் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் டெல்லியில் கம்பியூட்டர் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தவர்.
இளம் வயது, மத்திய அரசு வேலை அதுவும் கை நிறைய்ய சம்பளம். அப்பொழுதெல்லாம் அது ஷிஃப்ட் முறை வேலை வேறு. அண்ணன் எப்பொழுதும் இரவு ஷிஃப்ட் வேலை தான் எடுத்துக் கொள்வார். அங்கு கம்பியூட்டர் அறை நல்ல குளிரூட்டப்பட்டிருக்கும். இரவு நேரங்களில் பெரிய்ய வேலை ஒன்று இருக்காது. ஏதாவது டாட்டா டேப்பை கருவியில் மாட்டிவிட்டுவிட்டு ப்ராசஸ் ஆரம்பித்து விட்டால் அது முடிந்து ப்ரிண்ட் அவுட் எல்லாம் சேகரித்து அடுக்கி வைத்து விட வேண்டும். அலுவலக அறையிலேயே மெத்தை தலையணை எல்லாம் கொண்டு வைத்து இருந்தார். அப்படியே கம்பியூட்டர் அறையிலேயே படுத்து தூங்கிவிட்டு படு ஃப்ரெஷ்ஷாக காலை வீட்டுக்கு வந்து விடுவார். இப்படியாக அவர் கழித்த வருடங்கள் ஐந்து. சுக வாசியான வாழ்க்கை..
நான் அரபு நாடுகளில் வேலை பார்த்த போது இவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன்.. “அண்ணே .. அங்க அப்படியே கம்பியூட்டர் ஆபரேட்டராகவே இருக்காதீங்கண்ணே.. வாழ்க்கையிலே முன்னேறுங்கண்ணே.. ஆரக்கிள், C, அப்புறம் இது..இதெல்லாம் படிச்சீங்கண்ணா நீங்க இங்கே சவூதிக்கே வந்துடலாம்ணே.. நிறைய்ய காசு சம்பாதிக்கலாம்.. “ என்று அவருக்குள் கனவுகளை விதைக்கலானேன். அவரும் ‘பார்க்கலாம்..பார்க்கலாம்..’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இந்த சந்தடியில் எனது நண்பரான அவரது இளைய சகோதரரையும் நான் இங்கு கொண்டு வந்து விட்டதால் ..அவரது அறிவுரையும் சேர்ந்து அண்ணனைக் கொஞ்சம் மாற்றியது.
கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் படிக்க வைத்து (எதையுமே புதியதாகத் தெரிந்து கொண்டு அவருக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் கஷ்டப்ப்ட்டுதான் மண்டையில் ஏற்ற வேண்டியதாயிருந்தது..) அவரை சவுதியில் என் நண்பரின் கம்பெனிக்குக் கொண்டு வந்து விட்டேன்.. “நான் தொடர்ந்து படித்து நல்ல முறையில் வேலை செய்து நல்ல பெயர் வாங்குவேன்” என்று அவர் எனக்கு வாக்கு கொடுத்ததாக நானே நினைத்துக் கொண்டதும் ஒரு காரணம்.. அவர் டெல்லியில் அரசு நிறுவனத்தில் வாங்கிக் கொண்டிருந்ததைப் போல 40 மடங்கு சம்பளம் ஒரு மாதத்துக்கு.. வருமான வரிகள் இல்லை..
அவருக்குத் தொழில் சரியாகத் தெரியவில்லை.. எதுவுமே அவரால் செய்ய முடியாத நிலை.. நான் பகலில் என் வேலையைச் செய்து முடித்து விட்டு மாலை அவரது வேலைகளை வீட்டில் செய்து கொடுப்பேன். அதை மறுநாள் அலுவலகத்தில் சென்று தான் செய்த்தாகக் காட்டிக் கொண்டார்.. இப்படியாக நான் அவரைக் கரை சேர்த்தது ஒரு முழு வருடமும்.. வந்த இரண்டு மாதங்களில் தன் டெல்லி நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் கைப்பட இருந்த வாசகம்..”நான் டெல்லீல அரசு வேலையில நிம்மதியாக இருந்தேன்..இந்த சீமாச்சு என்னை இங்கே கொண்டு வந்து படி படின்னு படுத்திட்டு இருக்கான்.. நான் இவனை ஃபாரின் வேலை வேணும்னு கேக்கவே இல்லியே...” .. ஆம் அவர் சொன்னது உண்மை.. அவர் கேட்கவேயில்லை.. அவருக்குள்.. அவருக்கான என் கனவுகளை விதைத்தது நான் தான்.. தவறு என்னிடமே... நண்பர் இப்பொழுது அமெரிக்காவில் அருகிலுள்ள ஒரு நகரில் தான் இருக்கிறார்.. அவருடன் எனக்குத் தொடர்பு இல்லை..
oOo oOo oOo
டெல்லி நண்பரின் நண்பர் இன்னொரு நண்பர்.. அவரது வகுப்புத் தோழர்.. இவரும் அதே நிலை தான்.. ஆனால் இவர் டெல்லியில்லை.. மயிலாடுதுறை அருகிலேயே இன்னொரு ஊரில் மத்திய அரசு அலுவலகத்தில் கம்பியூட்டரில் டேட்டா எண்ட்ரி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.. “சீமாச்சு..இந்த வேலை எனக்குப் பிடிக்கலை.. வாங்கற சம்பளம் பேச்சிலர் வாழ்க்கைக்கு சுகம்.. ஆனால் கல்யாணம் ஆகி புள்ளைக் குட்டி பிறந்தது என்றால் என்னால் இந்த சம்பளத்துக்குக் குப்பை கொட்ட முடியாது.. உன்னை மாதிரி ஃபாரின் வரணும்னு ஆசை யிருக்கு .. என்ன செய்யலாம்?” என்றார். நானும் அவருக்குள் கனவுகளின் விதைகளை ஊன்றி அவரை பயிற்றுவிக்கலானேன்.. ”இதெல்லாம் படிங்க அண்ணே.. நீங்கள் நல்லாப் படிப்பீங்க..படிச்சால் உங்களைப் ஃபாரின் அழைச்சிக்கிட்டு போக வேண்டியது என் பொறுப்பு..” என்று வாக்களித்தேன்..
சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிறிது மாற்றம் வந்து அவர் காதலித்த பெண்ணை உடனடியாக அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் திருமணமும் முடிந்தது.. நான் அவரிடம்..”அண்ணே கல்யாணம் பண்ணிட்டீங்க.. ரொம்ப சந்தோஷம்.. தொடர்ந்து படிங்க.. ஆனால் ஒரு விஷயம்.. எனக்கு உங்களுக்கு இருக்கிற மாதிரி ஒரு வாழ்க்கை லட்சியம் இருந்து இது போல் திருமணம் செய்து கொண்டால்.. என் லட்சியத்தை என் மனைவியிடமும் சொல்லி விட்டு ..அவளது ஒத்துழைப்புடன் படித்து என் லட்சியத்தை அடைஞ்சிருவேன்.. என் இலட்சியம் நிறைவேறும் வரை என் மனைவியைத் தீண்டமாட்டேன்.. ஆனால் உங்க நிலைமை எனக்குத் தெரியாது. நீங்க தொடர்ந்து படித்து ஃபாரின் வரணும்னு என் ஆசையும் கூட..” என்றேன்..
நண்பர் சொன்னது..”நிச்சயம் படிக்கிறேன்..” என்று என்னிடமிருந்து ஒரு பத்து புத்தகங்களை அள்ளிக்கொண்டார்.. அப்படியே...”நான் இரண்டு மாசம் வேலைக்கு லீவு போட்டுட்டு டெல்லிக்கு தேனிலவு போறேன்.. உன் புத்தகங்களுடன் போறேன்.. படிச்சிட்டு வாரேன்..” என்று சொன்னவர் போனது புத்தகங்களுடனும் நிறைய்ய படம் பார்க்க ஒரு வீசிஆருடனும்..
திருமணம் ஆகி நாலைந்து மாதங்களில்.. எனக்கு வந்த கடிதத்தில்..”ஒரு நல்ல செய்தி.. நான் இன்னும் 6 மாதங்களில் அப்பா வாகப் போறேன்..”
அவர் படிக்க வில்லை.. வாக்குறுதிகள் காற்றில்.. அப்படியும் அவரை நான் ரியாத்துக்கு அழைத்து வந்து வேலையில் சேர்த்து.. (நான் அவர் வேலையையும் சேர்த்து ஒரு வருடம் செய்து..) கொஞ்சம் கஷ்டத்துடன்..முன்னேற்றினேன்.. கடந்த 20 வருடங்களாக அவர் அரபு நாட்டு வாசி.. எனக்கு அவருடன் தற்போது தொடர்புகளில்லை..
oOo oOo oOo
இதிலெல்லாம் நான் கற்ற பாடம்..அடுத்தவருக்கான கனவுகளை நான் காணக்கூடாது என்பதே.. அவரவர் கனவுகளை அவரவர் தான் காண வேண்டும். அதற்கு உழைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.. நாம் வேண்டுமானால் தூண்டுகோலாக இருக்கலாமே தவிர ஊன்றுகோலாக இருக்கக் கூடாது..
இதை என் மனைவி அழகாகச் சொல்லுவாள்..:”Why do you want to carry other peoples' crosses? அவங்கவங்க சிலுவைகளை அவங்க தான் சுமக்கணும்.. நீங்க தான் மற்றவர்களுடையதை உங்கள் தோளில் மாட்டிக்கிட்டிருக்கீங்க.."
இந்தப் படிப்பினையை மறந்து நான் மாட்டிக் கொண்ட இன்னொரு சம்பவம் தான் இன்று நடந்தது.. இது தான் இந்த இடுகையை எழுதவும் வைத்தது..
oOo oOo oOo
இந்த நண்பர் சமீபத்திய அறிமுகம். இந்தியர் ஆனால் தமிழரில்லை..அமெரிக்காவில் பல வருடங்களாக இருக்கிறார்.. நடந்து வரும் அமெரிக்க பொருளாதாரச் சூழலில் சென்ற வருட இறுதியில் வேலையை இழந்து இன்னும் தேடிக்கொண்டிருந்தவர் என்னிடம் உதவி கேட்டு வந்தார்.. ஏழு மாத வீட்டு வாசத்தில் எல்லாம் மறந்து விட்டிருந்தார்.. சமீபத்திய ஏழெட்டு நேர்முகங்களில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.. அவரிடம் தினம் தினம் பேசி அவருக்குள் நேர்மறை எண்ணங்களை விதைத்து.. வழக்கம் போல ..”இதெல்லாம் படிங்க.. ஒண்ணும் கஷ்டமில்லை.. உங்களுக்கு XXX நிறுவனத்தில் வேலை வாங்கித்தர வேண்டியது என் பொறுப்பு ..” என்று பொறுப்பேற்றிருந்தேன்..
அவருக்கு நான் ஒரு மாத கோச்சிங் கொடுத்தேன்.. நான்கு தினங்களுக்கு முன்னர் அவரிடம் வேலைக்கான ஒரு வரையறை கொடுத்து..”இது தான் வேலை.. நல்ல சம்பளம் வரும்.. இந்த XXX நிறுவனத்தில் இந்த வேலைக்கான மேனேஜர் என் நண்பர் தான்.. அவரிடம் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.. 30 நிமிடம் நேர்முகம்.. நீங்கள் படிக்க வேண்டியது.. இந்த 4 பாடங்கள்.. உட்கார்ந்து மொத்தமாக 16 மணி நேரங்கள் படித்தால் உங்களால் வெற்றி பெற முடியும்.. இந்த 4 தலைப்புகளில் எதைக் கேட்டாலும் கடகடவென்று 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக பேச உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்..அது போதும்.. நீங்கள் வேலையில் சேர்ந்து விடலாம்..” என்று சொல்லி 4 தினங்கள் ஆகிவிட்டன..
நேர்முகத்தேர்வுக்கு முதல் நாளிரவு ஒரு பத்து மணியிருக்கும்.. என்னைத் தேடி வந்தார்..
“என்ன தலைவரே படிச்சிட்டீங்களா.. நான் ஒரு டம்மி நேர்முகம் இப்ப எடுக்கவா?..”
“இல்ல சீமாச்சு.. நீங்க சொன்னதெல்லாம் இன்னும் படிக்க ஆரம்பிக்கலை.. மத்தியானம் தானே இண்டர்வியூ.. காலையிலே படிச்சிடறேன்..”
யாரோ செருப்பாலடித்தது போல் இருந்தது எனக்கு..
நேற்று நேர்முகத்தில் ரொம்ப சொதப்பிவிட்டார்.. வேலை தர இருந்த நண்பர் என்னைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.. அவரிடம் சில அல்ப காரணங்களைச் சொல்லி..” நேற்று என் நண்பருக்கு எதிர் பாராதவிதமாக food poisoning.. ஆகிவிட்டது.. அதனால் அவர் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லவில்லை.. எனக்காக.. எனக்காக மட்டும் அவரை மறுமுறை நேர்முகம் செய்து பாருங்களேன்..” என்று கேட்டு அவருக்கான இண்டர்வியூவும் மறுமுறை அதே வேலைக்கு அடுத்த செவ்வாய் கிழமை.. வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்..
வேலை தேடும் நண்பரிடம் சென்று.. “ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? வெறும் 9 வினாடிகள் தான்.. ஆனால்..இந்த 9 வினாடிகளுக்காக வாழ்க்கை முழுவதும் ப்ராக்டீஸ் செய்து வாய்ப்பு கிடைக்காமல் வாழக்கையையே இழந்தவர்களை எனக்குத் தெரியும்.. உங்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு மொத்தம் 30 நிமிடங்கள் தான்.. அதற்காக வெறும் 16 மணி நேரம் நீங்கள் இதை படித்தால் உங்களுக்கு அந்த பெரிய்ய கம்பெனியில் நல்ல வேலை கிடைக்கும்.. முக்கியமாக இந்த வேலை வாழ்வில் மிகப்பெரிய்ய முன்னேற்றங்களுக்குச் சாத்தியமான வேலை.. உங்க professional career க்கு மிக முக்கியமான நிறுவனத்தில்..மிக முக்கியமான பொறுப்பு.. ஏழு மாதங்களாக நீங்கள் கஷ்டப்பட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் அவலங்கள் முடிவுக்கு வரும்.. நிரந்தரமான வேலை.. தயவு செய்து படியுங்கள்.. இது போன்று இரண்டாவது சான்ஸ் யாருக்கும் கிடைக்காது..” என்று சொல்லியிருக்கிறேன்..
மறுபடியும் வாழ்க்கையில் நான் செய்த தவறுகளை மீண்டும் செய்து கொண்டிருக்கிறேன்.. அடுத்தவருக்காக நான் காணும் கனவுகள்.. அவர்களது உழைப்புக்கான உத்தரவாதங்களின்றி அவர்கள் வெற்றி பெற நான் முயன்று கொண்டிருக்கிறேன்.. இதிலெல்லாம்.. எனக்கு பைசா காசு வருமானம் கிடையாது.. இது எனது தொழிலும் கிடையாது.. ஆனாலும் நண்பர்களுக்காக....
oOo oOo oOO
எவ்வளவு பாடங்கள் படித்தாலும் எனக்குப் புரிவதில்லை.. ஆனால்.. இது போன்ற அனுபவங்கள் சில மட்டுமே.. பல அனுபவங்கள் எனக்கு மன நிறைவைத் தந்திருக்கின்றன்.. நான் செயத சிறு உதவிகளால் நிறைய பேருக்குத் திருப்பங்கள் உண்டாகி அவர்கள் குடும்பமே முன்னேறியிருக்கிறதால் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு அளவுகளில்லை.. நான் செய்தது சிறு உதவிகள் தான் .. ஆனால் முக்கியமான திருப்பங்கள் அவர்களுக்கு.. அவையெல்லாம் எழுத சந்தர்ப்பம் என்றாவது கிடைக்காமலாப் போகும்??