Monday, July 04, 2011

123. கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி !!!

மதுமிதாவை எனக்கு ரொம்ப நாளாத் தெரியும்..

ரொம்பநாளான்னா.. ரொம்ப நாள்..

பிறப்பதற்கு முன்னாலிருந்துன்னு கூடச் சொல்லலாம்.. ஏன்னா, மது அவங்க அம்மா ஜெகதீஸ்வரி வயிற்றிலிருந்த போது எடுத்த ஸ்கேன் போட்டோவை அவங்க அப்பா கோவிந்தா காட்டிய நாளிலிருந்து தெரியும்..

நான் வேலைக்குப் போன பின் நான் மிகவும் அன்பாக நேசித்த எனது மகள் போன்றவள் மது.

மது மீது நான் கொண்ட பாசம் காரணமாகவோ என்னவோ எனக்கும் பெண்குழந்தைகள் பிடிக்கும் என்றுதான் ஆண்டவன் எனக்கு 3 மகள்களைத் தந்தானோ என்று கூட சமயங்களில் நினைப்பதுண்டு..


oOo oOo oOo

அமெரிக்காவில் மதுவுக்கு இரண்டு வயதாகும் போதெல்லாம் நானும் மதுவீட்டில் வளைய வருவேன்.

“வாத்தன் மாமா..” என்பது தான் அப்பொழுது அவள் கூப்பிடும் பெயர்.. “வாசன்” என்பதன் மழலை அது..

எப்பொழுதும் அம்மா அப்பா சொன்னதைத் தவறாமல் கேட்கும் குழந்தை அவள். இரண்டு வயதில் வாயில் விரல் போட்டுச் சப்பும் பழக்கம் உள்ளவ்ள்..

நான் பார்த்துவிட்டு..” மதூ.. வாயில விரல் போடக்கூடாது..” என்று சொன்னால் உடனே விரலை எடுத்து விடுவாள்.. ஆனால் 5 வினாடிகளில் மறுபடியும் அவள் கட்டைவிரல் அவள் வாயில்..

தனக்கு சரியென்று பட்டதை விடாமல் செய்யும் குணம் அவளுக்கு உண்டு.. அதே நேரத்தில் பெரியவர்களின் சொல்லுக்குக் கட்டுப்படும் குணமும் அதிகம். இரண்டுக்கும் இடையில் உள்ள சாமர்த்தியமான பேலன்ஸ் அவள் சாதுர்யம்..

மூன்று வயதில் அவளை க்ரீன்ஸ்பரோவில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள் அவள் பெற்றோர்.. ரொம்பத் தெளிவாக “வாத்தன் மாமா வந்தாத்தான் ஸ்கூலுக்குப் போவேன்” என்று சொல்லி விட்டாள்.. அவளுக்காக ஆபீஸை விட்டு வந்து அவளுடன் ப்ரீ கேஜி வகுப்பு அட்டெண்ட் பண்ணிய பெருமையும் எனக்கு உண்டு..

அதற்குப் பிறகு மதுவின் பெற்றோர் குடும்பத்துடன் அட்லாண்டாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அதற்குப்பிறகு 15 வருஷமாக மது அட்லாண்டா வாசி.

oOo oOo oOo

அவ்வப்பொழுது கோவிந்தாவுக்குப் ஃபோன் செய்து மதுவின் முன்னேற்றங்களைக் கேட்டறிந்து கொள்வேன்.

வகுப்பில் எப்பொழுதும் முதலாவதாகத் தேறுவது மதுவின் வழக்கம்.. அவள் ஸ்கூலில் இந்தியன் குழந்தைகளுக்கு நடுவில் அவள் ரொம்ப பாப்புலர்.. அவளது நெருங்கிய தோழி ஒரு சீனப்பெண்.. எல்லா தேசத்தவர்களும் அன்புடன் பழகும் ஒரு ஸ்வீட் பர்சனாலிட்டி மது..


மதுவுக்கு வயலின் வாசிக்கத்தெரியும்...

வீணை வாசிக்கத்தெரியும்..

கர்நாடக சங்கீதம் தெரியும்..

அதெல்லாம் மட்டுமில்லை.. அவள் பரதநாட்டியமும் தேர்ந்து சென்ற ஜூன் 18 அன்று அட்லாண்டா நகரில் ரோஸ்வெல் கல்சுரல் ஆர்ட் செண்டரில் மதுவின் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்குச் சென்றிருந்தேன்..

மதுவின் இந்தச் சாதனைகளால் அமெரிக்காவின் மிகப் பிரபலமான வாண்டர்பில்ட் யூனிவர்சிடியில் முழு உதவித்தொகையுடன் BS in Child Development படிக்க மதுவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.. இன்னும் 10 வருடங்களில் மது ஒரு திறமையான குழந்தைகள் நல மருத்துவராக வருவதற்கான முதல் படி இது.

oOo oOo oOo oOo


ஜூன் 18,
அரங்கேற்ற வளாகத்தில் 500 பேர் தமிழ் மற்றும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் குழுமியிருந்தனர். அனைவரும் மதுவை அறிந்தவர்கள்..

ஒவ்வொருவரையும் கோவிந்தா-ஜெகதா தம்பதியினர் முறைப்படி இல்லத்துக்குச் சென்று தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு பத்திரிகை வைத்து அழைத்து வந்தவர்கள்..

“எனக்கெல்லாம் என்னடா பத்திரிகை.. எப்பன்னு சொல்லு.. வந்திடறேன்..” என்றவனையும் மறுத்து கிட்டத்தட்ட 300 மைலகல் காரோட்டி
குடுமப்த்துடன் என் இல்லம் வரை வந்து வரவேற்றனர்.

மதுவின் நடன அரங்கேற்றம் மிக அருமையாக இருந்தது. ஆரம்பத்தில் அவள் ஆடிய தோடைய மங்கலம்.. ஜெய ஜானகீ ரமண பாட்டுக்கு நான் அப்படியே அடிமை..

இது போல் எட்டு அயிட்டங்கள். சிலப்பதிகாரத்தில் மாதவியின் அரங்கேற்ற நிகழ்ச்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள் மதூ...

பிறகு நீண்ட ஒரு வர்ணம், சந்திரசூட ராகமாலிகை கிருதிக்கு நடனம்..ஜெயதேவர் அஷ்டபதியிலிருந்து ஒரு பாடலுக்கு நடனம் எல்லாமே மிக அழகாக அமைந்தது..

திருப்பாவையிலிருந்து “வாரணமாயிரம்” பாட்டின் போது அங்கே மது மறைந்து ஆண்டாள் அப்படியே உருவெடுத்து வந்தாற் போல் பாவனைகள் அவள் முகத்தில் மாறி மாறி அட்டகாசமாக ஆடினாள்.

அவளது ஆட்டத்தின் போது அவளது பெற்றோர் அருகில் நானும் மாமனாக அமர்ந்திருந்தேன்.. மங்களம் பாடி ஆடி முடித்தபோது அம்மா ஜெகதா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.. எனக்கும் ”என் மகள் சாதித்து விட்டாள்..” என்று பெருமையாக இருந்தது..

பெண்ணை பரதநாட்டிய அரங்கேற்றம் வரைக் கொண்டுவருவதென்பது ஒரு பெரீய்ய தவம் மாதிரி.. அதுவும் அமெரிக்கா மாதிரி நாட்டில் திருமதி சவீதா விஸ்வநாதன் மாதிரி ஒரு குரு அமைந்து எந்த வித மனத் திருப்பங்களும் இல்லாமல் 16 வருடங்கள் ஒரே இடத்தில் அமையும் மாதிரி அமைவதெல்லாம் ஆண்டவன் அருள் மட்டுமே..

மதுவின் சாதனைகள் மட்டுமன்றி அவளை இவ்வளவு தூரத்து வழி நடத்திய அவள் பெற்றோர் கோவிந்தா-ஜெகதா தம்பதியரின் முனைப்புக்கும் தவத்துக்கும் இன்னொரு தகப்பனாக நான் தலை வணங்கிறேன்..

எவ்வளவு உழைப்பு இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் என்பதை என்னால் இங்கு எழுத்தில் விவரிக்க முடியாது..



நிகழ்ச்சியின் முடிவில் மதுவைப் பாராட்டி “மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக என் செல்லக்குட்டி மதுவுக்கு இந்தப் பொன்னாடயை அணிவிக்கிறேன்..” என்று சொல்லி பொன்னாடை அணிவித்து மதுவைப் பாராட்டினேன்..

நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்த விருந்தினர்களி புதிதாக மூன்று முன்னாள் மாணவர்கள் என் பள்ளி சார்பாக என்னிடம் அறிமுகமானது என் பள்ளிக்குக் கிடைத்த கைமேல் பலன்..

நிறைவான இரவு உணவுக்குப் பின் மதுவையும் பெற்றோரையும் மீண்டும் வாழ்த்தி விடைபெற்றேன்..



மதுவைப் பற்றி நினைக்கும் போது எனக்கு இந்த வரி தான் உடனே உதித்தது..

“கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி.. !”

மதூ நிச்சயமாக ஒரு சாதனை இளவரசி தான்.. அவளுடன் பழகியவன்.. அவளது பாசத்துக்குரிய “வாத்தன் மாமா” நான் என்பதில் நானும் மிகப் பெருமையடைகிறேன்...

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

திருப்பாவையிலிருந்து “வாரணமாயிரம்” பாட்டின் போது அங்கே மது மறைந்து ஆண்டாள் அப்படியே உருவெடுத்து வந்தாற் போல் பாவனைகள் அவள் முகத்தில் மாறி மாறி அட்டகாசமாக ஆடினாள்.//

மன நிறைவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

உண்மைத்தமிழன் said...

அங்கேயிருந்தும் இன்னமும் நமது பாரம்பரியம் மறவாமல் பரதம் கற்பது என்பதே பெரிய விஷயம்..!

நீங்களும்தான் எழுத்தில் ராகங்களையும், வர்ணங்களையும்கூட ஒரு சேர ஆடிக் களைத்திருக்கிறீர்கள்..!

மதுவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து விடுங்கள்..!

maniajith007 said...

naanum dbtr student thaan sir