Thursday, July 28, 2011

126. என்ன தான் செய்யறது இவங்களை !!

கம்பியூட்டர் துறைக்கு வந்த பிறகு நிறைய்ய பேர் நம்மகிட்டே வேலை வாங்கித் தரச்சொல்லி உதவிக்கு வருவாங்க. அப்படி நிறைய்ய பேருக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.. அதற்குப் பின்னர் வாழ்வில் உயர் நிலைக்குச் சென்ற பின்னர் நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்கள் சிலர்.. கண்டுக்காமல் போனவர்கள் பலர். உதவி செய்யும் போதே எதையும் எதிர்பார்க்காமல் செய்துவிட்டு அப்படியே மறந்தது போல் இருந்து விடுவதால் எதுவும் பாதித்ததில்லை.. அதெல்லாம் வேறு.. இன்றைக்கு ஒரு அனுபவம்.. இது போன்ற அனுபவங்கள் எனக்குப் புதிதில்லையாதலால், இது போன்ற மற்ற அனுபவங்களையும் தொகுத்து இங்கு எழுதலாம் என்று தான். இது போன்று நிறைய எழுதலாம் .. சில மட்டும் இங்கே.. இன்றைய அனுபவம் கடைசியில்..

oOo oOo oOo

1980 களின் ஆரம்பத்தில் “நீங்க பாக்குற கம்பெனியிலேயே இவனுக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்களேன் ..” ரெகமண்டேஷன் வந்த்து மிக நெருங்ங்ங்ங்கிய தோழியிடமிருந்து. வேறொரு விஷயத்தில் என்னிடம் போட்டியிலிருந்து கௌரவமாக விலகிவிட்டிருந்தபடியால் நானும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்..” என்பது இந்த விஷயத்தில் அந்தப் பையன் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க வில்லை..

பையன் அப்பொழுது தஞ்சை அருகில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் MSc கணிதம் முடித்துவிட்டு கம்பியூட்டரில் ஏதோ டிப்ளமாவும் பெற்றிருந்தார். தகுதிகளைப் பொறுத்து அவர் எல்லாம் பெற்றிருந்ததால் நான் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலைக்குச் சொல்லியிருந்தேன். அப்பொழுதெல்லாம் Aptitude Test என்று ஒன்று வைப்பார்கள். கணிதத்திலும், லாஜிக்கிலும் மொத்தம் 40 கேள்விகள் கேட்பார்கள். நானும் அந்தத் தேர்வு எழுதியவன் தான். 20 பசங்களோடு தேர்வு எழுதி முடிவுக்காக பதற்றத்துடன் காத்திருந்த போது.. அவர் ஆபீஸ் ரூமிலிருந்து MD யே எழ்ந்து வந்து என்னைத் தேடிப் பிடித்து.. ’உடனே பிடி வேலையை..இன்னிலேருந்து உனக்குச் சம்பளம்” என்று தேர்வானவன் (சுயபுராணம் கொஞ்சம் ஓவர் இல்லே !!) இது நடந்தது 1988ல்..

இப்போ இந்தப் பையன் கதைக்கு வருவோம்.. Aptitude Test கேள்விகளின் தரம் எனக்குத் தெரிந்திருந்ததால் அதே போல் 50 கேள்விகளை புத்தகங்களிலிருந்து தொகுத்து அவரிடம் கொடுத்து ”டெஸ்ட்டுக்கு இதெல்லாம் படிச்சிட்டு வந்திரு ராஜா.. இண்டர்வியூவிலே நீ சாதாரணமாப் பண்ணினாப் போதும் நான் எம்.டி கிட்டே சொல்லிடறேன்” என்று சொல்லியாகிவிட்டது..

அது ஆச்சு ஒரு மாசம்.. ஒரு நாள் அவருக்கும் கம்பெனியிலிருந்து கடிதம் போய் அவர் டெஸ்ட்டுக்கும் இண்டர்வியூவுக்கும் தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டார். நான் தங்கியிருந்த கோட்டூர்புரம் அறையிலேயே தங்கியிருந்துவிட்டு காலையில் டெஸ்ட்டுக்கு என்னுடன் கிளம்ப வேண்டியது.

முதல் நாள் இரவு மணி 11 இருக்கும்.. தூங்கப் போற நேரம்..

“சீமாச்சு.. ஒரே ஒரு சந்தேகம்” என்றார்....

“என்ன ராஜா.. என்ன விஷயம்?”

“நீங்க கொடுத்த் 50 கணக்குல 40 கணக்கு தெரியும் .. ஒரு பத்து கணக்கு மட்டும் எப்படி போடறதுன்னு தெரியலை.. கொஞ்சம் சொல்லித் தர்றீங்களா?”

Aptitude Test கணக்கெல்லாம் ஒன்றும் கடினம் இல்லை.. அதிக பட்சம் 8ம் வகுப்பு 9ம் வகுப்பு (சமச்சீர் இல்லை.. அப்போதைய தமிழக அரசு பாடத்திட்டம்) தரத்தில் தான் இருக்கும். அதுவுன் 50 கேள்விகள் கொடுத்து 1 மாதத்துக்கும் மேலே ஆயிடிச்சி. இவரோ கணிதத்தில் MSc வேறு. இவருக்கே தெரிந்திருக்க வேண்டும் .. இல்லையென்றால் அங்கேயே ஒரு பள்ளி கணக்கு வாத்தியார்.. இல்லேன்னா ஹையர் செகண்டரியில் நல்ல ஸ்டூடண்டாப் பார்த்து கேட்டிருந்தால் மொத்தம் 10 நிமிஷத்துல சொல்லிக்கொடுத்திருப்பாங்க....

“என்ன ராஜா.. நான் கொடுத்து 1 மாச மாச்சே.. இன்னுமா சந்தேகம்.. இந்த மாதிரி கடைசி நிமிஷத்துல கேட்டா எப்படி? “ எனக்கு வேலை முடிந்து வந்த அசதி வேறு.. தூக்கம் கண்ணை சுழற்றியது..

“எப்படியும் டெஸ்டுக்கு முன்னாடி உங்களைப் பார்க்கப்போறேன்.. அதனால உங்க கிட்டேயே கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்..”

இவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்ட அந்த அழகிய விழியாள் நினைப்பில் அன்றிரவு தூக்கம் கோவிந்தா!!

டெஸ்ட்டும் நன்றாக எழுதினார்..

எம்.டி யுடன் இண்டர்வியூவுக்குப் போனார்..

அவர் முடித்து வந்தவுடன் கேண்டிடேட்டைப் பத்தி எம்.டி என்ன நினைக்கிறார் என்று அறிவதற்குப் போனேன்..

“என்ன அருண்.. இவர் எனக்கு ‘ரொம்ப’ வேண்டியவர்.. இண்டர்வியூ எப்படிப் பண்ணினார்?”

“டெஸ்ட் நல்லா எழுதியிருந்தார்.. மத்தபடி அவருக்கு ஒண்ணுமே தெரியலையே.. நான் கேட்ட மொத்தம் 10 கேள்விக்கும் சரியா பதில் சொல்லலையே.. என்ன பண்றது..”

“கொஞ்சமாவது தேறுவாரா..?” - எவ்வளவு தப்போ அவ்வளவுக்கு சம்பளத்தைக் குறைச்சிக்கிட்டு வேலை கொடுக்கலாமே என்று நான் தருமி பாணி போஸில் கேட்டேன்..

“வாசன்.. என்னைக் கேட்டால் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்.. ஆனால் உனக்காக வேண்டுமானால் செய்கிறேன்.. இந்த முடிவை நீயே எடு.. நீயே எடுத்துக் கொள் அவரை.. உன் டீமிலேயே போட்டுக்கொள்.. எனக்கொன்றும் பிரச்சினையில்லை.. Its your call.." என்று என்னிடமே முடிவைத் தள்ளிவிட்டார்.


“ஒரு 5 நிமிஷம் டைம் குடு அருண்.. நான் யோசிச்சிட்டு வந்து சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்..

10 நிமிஷம் கழித்து எம்.டி கூப்பிட்டு அனுப்பினார்..

"What did you decide?"

"Lets leave him.. We will get a better candidate.." என்று சொல்லிவிட்டு பையனைப் பேக் பண்ணி தஞ்சாவூர் அனுப்பிவிட்டேன்..

அதற்குப் பிறகு யார் சிபாரிசிலோ கணக்கு ஆசிரியராக (!!) தஞ்சையில் பணியாற்றிவிட்டு.. அப்புறம் அடித்த சுக்ர தசையில் அரபு நாட்டில் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறார் அண்ணன் இப்பொழுது..

oOo oOo oOo

அதே கம்பெனி.. அதே மாதிரி வேலை.. அதே மாதிரி டெஸ்ட்.. இப்ப வந்தது ஒரு மயிலாடுதுறை பையன். எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் பள்ளியில். வளர்ந்ததெல்லாம் ஒரே தெரு வேறு..

முதல் நாள் இரவு என் அறைக்கு வந்து தங்கியவன் என்னிடமிருந்து எல்லாம் கேட்டுக் கொண்டான். பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் முதல் 3 ரேங்குகளுக்குள் வந்தவன் என்பதால் இவனிடம் பெரிய்ய பிரச்சினை ஒன்றுமிருக்கவில்லை.. எப்படியெல்லாம் இண்டர்வியூவில் பதில் சொல்ல வேண்டும் என்று எல்லாம் சொல்லிக்கொடுத்த பின்பு நான் தூங்கப் போகும் போது மணி இரவு இரண்டு..

காலை எழுந்தவுடன் காபியெல்லாம் குடித்துவிட்டு “என்னுடனேயே கம்பெனிக்கு வந்து விடேன்.. அங்கேயே உட்கார்ந்து நீ prepare பண்ணலாம் “ என்றதற்கு..

“12 மணிக்குத் தான் டெஸ்ட். நீ முன்னால.. போ .. நான் வந்துடறேன். மவுண்ட் ரோடு தானே..எனக்கு எல்லாம் தெரியும்..”

“சரி .. நல்லாப் படி.. நல்லா பண்ணு.. இண்டர்வியூ முடிச்சிட்டு வையிட் பண்ணு.. சேர்ந்தே போய்ச் சாப்பிடலாம்..”

மதியம் கம்பெனியில் தேர்வு அறையில் தேடிய போது ஆளைக் காணவில்லை.. என்ன ஆச்சி என்று கவலையில் இரவு வீட்டுக்கு வந்த போது.. அறைத்தோழன் பாலு...

“உன் ஆளு ஏதோ லெட்டர் கொடுத்திருக்கான்யா.. உனக்கு.. மத்யானம் அவனைக் கொண்டு போயி மயிலாடுதுறைக்கு பஸ் ஏத்தி விட்டு வந்துட்டேன்யா.. “ என்றான்..

கடிதத்தில்.. “உன் உதவிகளுக்கு நன்றி.. எனக்கு இண்டர்வியூ பத்தி ரொம்ப பயமாயிருக்கு.. எனக்கு இந்த வேலை வேண்டாம்.. நான் மாயவரம் போறேன்..” என்று இரண்டு வரி..

அதற்குப் பிறகு நண்பர் வங்கித்தேர்வு எழுதி ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக 20 வருடங்களாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்..

oOo

இன்னும் மூன்று அனுபவங்கள்.. மற்றும் இன்றைய அனுபவம்.. எல்லாம் இருக்கு.. பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால் அவை நாளை தொடரும்.. நிச்சயமா..



திண்டுக்கல் நகராட்சியில் 12 லட்ச ரூபாய் செலவில் நீருற்றாம்.. நகராட்சி பள்ளிகளெல்லாம் கட்டடங்களும், கழிப்பறைகளும், வகுப்பறை வசதிகளுமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போது 12 லட்ச ரூபாய் செலவில் நீரூற்று அமைத்த அந்த நகராட்சி நிர்வாகத்தை என்ன சொல்வது????

9 comments:

பழமைபேசி said...

அனுபவம் அருமை... அந்த படமும்... நீரூற்று?!

தருமி said...

பயங்கர சஸ்பென்ஸ். சீக்கிரம் வாங்க ....

புதுகை.அப்துல்லா said...

// திண்டுக்கல் நகராட்சியில் 12 லட்ச ரூபாய் செலவில் நீருற்றாம்

//

ஏய்ய் இன்னா மேன் பொலம்புற? நாங்கள்லாம் அமேரிக்காமேரி ஆனா பிடிக்காதே ஒனக்கு!!

முகமூடி said...

அந்த பஞ்சு மிட்டாய் கலர் பாப்பாதான் பதிவில் வரும் அந்த அழகிய விழியாளா? கொள்ளை அழகு. என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு. திருஷ்டி சுத்தி போடுங்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

சீமாச்சு.. said...

@பழமைபேசி & @தருமி ஐயா, நன்றி.. தொடர்ச்சி வந்து கொண்டிருக்கிறது..

சீமாச்சு.. said...

@அப்து அண்ணே..
//ஏய்ய் இன்னா மேன் பொலம்புற? நாங்கள்லாம் அமேரிக்காமேரி ஆனா பிடிக்காதே ஒனக்கு!!//

அது யாரு அவங்க அமெரிக்கா மேரி? நம்ம ஊரு மேரி யாவே இருக்கலாமே :)

சீமாச்சு.. said...

@முகமூடி அண்ணா,
//அந்த பஞ்சு மிட்டாய் கலர் பாப்பாதான் பதிவில் வரும் அந்த அழகிய விழியாளா? கொள்ளை அழகு. என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு. திருஷ்டி சுத்தி போடுங்கள்.//

அந்த அழகிய விழியாள், பஞ்சு மிட்டாய் கலர் பாப்பாவை விட ரொம்ப அழகாக்கும் :) அதெல்லாம் அந்தக் காலம் !!

சீமாச்சு.. said...

@ரத்னவேல்.. தொடர்ச்சி இன்று வந்து கொண்டிருக்கிறது.. உங்கள் வருகைக்கு நன்றி !!