Sunday, July 26, 2009

84. அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்

அண்ணலும் நோக்கினார்..அவளும் நோக்கினாள்” என்ற கம்பரின் வரிக்கு, புலவர் கீரன் (இவர் மயிலாடுதுறைக்காரர் தெரியுமோ?) அவர்கள் தந்த ஒர் அருமையான விளக்கத்தை “இதயம் பேத்துகிறது” வலைப்பதிவில், ஜவஹர் இட்டிருந்தார்.

“அண்ணல் நோக்கினான்;அவளும் நோக்கினாள்” என்று அவளுக்கு மட்டும்தானே உம் போட வேண்டும்? என்ற ஒரு அருமையான கேள்வியை முன் வைக்கிறார். பின்னர் அதற்கு ஒரு விபத்துக் காட்சியை விளக்கிவிட்டு இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் இரண்டு உம்மைகள் என்ற சொல்கிறார்.

இரண்டு உம் வருகிற இடங்கள் எல்லாமே-தற்செயலாக நிகழ்பவை. அதாவது ஆக்சிடேண்டலாக நிகழ்பவை. ராமனும் சீதையும் திட்டமிட்டு சைட் அடிக்கவில்லை என்பதைக் காட்டவே கம்பர் இரண்டு உம் போட்டார்.

நியாயமான வாதம். கொஞ்சம் சிந்திக்க வேறு செய்தது.

கம்பராமாயணத்தில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை. ஆனால் என் தமிழாசிரியர் முனைவர் இராமபத்ராச்சாரியார் அவர்கள் “கம்பன் கவி இசைச்செல்வர்” என்ற விருது வாங்கியவர். கம்பராமாயணத்தைத் தேனொழுகக் கவிபாடிப் பாடம் நடத்துவார். கம்பனின் “இந்த இப்பிறவிக்கு இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன்” என்ற வரிக்கு இரண்டு மணி நேரம் கூட வியாக்கியானம் சொல்வதில் வல்லவர். அவரிடம் படித்த எனக்கு, புலவர் கீரனின் விளக்கம் யோசிக்க வைத்ததில் வியப்பேதுமில்லை.

சொல்லப்போனால், மயிலாடுதுறையில் புலவர் கீரன் இல்லமும் என் தமிழாசிரியர் இல்லமும் அடுத்தடுத்த தெருக்கள் தான். கீரன் இருந்தது திருஇந்தளூர் வடக்கு வீதி, என் தமிழாசிரியர் இருப்பது திருஇந்தளூர் சன்னதித் தெரு.

சரி “அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்” என்ற வரிக்கு வருவோம்.

சாதாரணமாக பெண்கள் ஆண்களை நோக்கிவதில் ஒரு டெக்னிக் இருக்கும். டிஜிட்டல் காமிரா மாதிரி இமைக்கும் நேரத்தில் பார்த்து விடுவார்கள். அந்த ஒரு கணத்திலேயே தான் பார்த்த ஆடவனைப் பற்றிய (தனக்குத் தேவையான) விவரங்களைக் கண்டுவிடுவார்கள். முன்பின் அறியாத ஆடவனிடம் எப்பொழுதும் நேருக்கு நேர் பார்வையைத் தவிர்த்து விடுவார்கள். தான் பார்ப்பதை அந்த ஆடவன் பார்த்துவிட்டால் அடுத்த split second லேயே பார்வையை வேறெங்காவது திருப்பிவிடுவார்கள்.. (எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்போம் !!)


அதுவும் சீதை அரசனின் மகள்; சுயம்வரத்துக்குத் தயாராயிருப்பவர். தனியாக மாடத்தில் நின்று கொண்டிருந்திருக்க மாட்டார். அப்பவும் தோழிகள் அருகில் இருந்திருப்பார்கள்.

இராமனும் தனியாக வரவில்லை. முனிவர் விஸ்வாமித்திரருடனும் இளவல் இலக்குவனுடனும் வந்திருக்கிறார். அப்படியிருக்கும் போது இருவரும் மெய்மறந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருக்க
முடியாது. அது எப்படியும் இருவரின் தகுதிகளுக்கும் உகந்ததல்ல. விஸ்வாமித்திரர் போன்ற ஒரு கோபக்கார முனிவருடன் வரும் போது இராமரும் அப்படிச் செய்யத் துணிந்திருக்க மாட்டார்.

அப்புறம் என்னதான் நடந்திருக்கும்?

oOo


இந்த உரையாடல் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று..


“அந்தாளை நீ பாத்தியா?”
“பார்த்தேன் டா”
“இது அந்தாளுக்குத் தெரியுமா?”
“அவரும் பார்த்தாருடா”

இதில் வந்த ”அவரும்” என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “அவர் என்னைப் பார்த்தார்” என்ற பொருள் மட்டுமா? “நான் அவரைப் பார்த்ததை அவர் பார்த்தார்” என்ற பொருள் வருகிறதில்லையா? இந்த இடத்தில் ”அவர் இவரைப் பார்த்தார் ” என்ற நேர் பொருளை விட “அவர் என்னைப் பார்த்துவிட்டார்” என்று உணர்வு பூர்வமான ஒரு மறைபொருள் தான் மிக முக்கியமானது.


அது போலத்தான் இராமரும் சீதையும் பார்த்துக் கொள்கிறார்கள்.. சீதை தன்னைப் பார்த்ததை அண்ணலும் நோக்கினார்; அது போல் அண்ணல் பார்த்ததை சீதையும் நோக்கினாள்; என்ற பொருள் வருகிறதல்லவா?
இதில் பார்வைகள் சந்தித்துக் கொள்வது split of a second தான். ஆனால் அந்தப்
பார்வைகளின் பொருள் “நீ என்னை பார்த்ததை நான் பார்த்துவிட்டேன்” என்று இருவர் மனதிலும் தோன்றிய எண்ணங்கள் பரிமாறப்பட்டன என்பது தான் இங்கு சிறப்புச் செய்தி.

oOo
ஒன்பதாவது படிக்கும் போது தமிழ் இலக்கணத்துல தற்குறிப்பேற்றணி என்ற ஒரு அணி பாடமாக வரும். அதாவது “இயற்கையாக நடக்கும் ஒரு காட்சியின் மேல் கவிஞன் தன் சொந்தக் குறிப்பை ஏற்றிக் கூறும் அழகு”. இதற்கு பாடப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டு கூறப்பட்டிருக்கும். தமிழ்த் தேர்வுகளில் நான் இதற்கு கம்பராமாயணச் செய்யுள் தான் எப்பொழுதுமே எடுத்துக்காட்டாக எழுதுவேன்.

தேர்வு நேரத்தில் எல்லா விடைத்தாள்களையும் திருத்தும் தமிழாசிரியர் வழக்கமான சிலப்பதிகார எடுத்துக்காட்டே படிச்சுப் படிச்சு போரடிச்சிப் போயிருக்கும் போது நான் வித்தியாசமாக கம்பராமாயணம் எழுதியதைப் படிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முழு மதிப்பெண்கள் போட்டு விடுவார்.


முனிவருடனும், இலக்குவனுடனும் ராமபிரான் மிதிலை நகரத்துக்கள் நுழைகிறாராம். அப்பொழுது மிதிலா நகரத்துக் கொடிகள் காற்றில் மிக வேகமாக அசைகின்றன. அதற்குப் பொருளாக கம்பர் இப்படிக் கூறுகிறார். “இந்த மிதிலா நகரம் செய்த தவத்தின் விளைவாக இலக்குமி (செய்யவள்) தேவியே இங்கு வந்துப் பிறந்து உனக்காகக் காத்திருக்கிறார். அவளை மிகவும் காக்க வைத்துவிடாதே.. தயவு செய்து விரைந்து வா (ஒல்லை வா !!) என்று அழைப்பது போல மிதிலா நகரத்துக் கொடிகள் அசைகின்றன” என்று தனது குறிப்பைக் கம்பர் கொடியசைவின் மேல் ஏற்றிக் கூறுகிறார்


மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்த கடிநகர், கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா !!

சீமாச்சுவின் மனசாட்சி: கம்பராமாயணத்துக்கெல்லாம் வியாக்கியானம் பேசி மாட்டிக்காதே.. அதுக்கெல்லாம் தான் மாதவிப்பந்தல் கேயாரெஸ் இருக்காரே.. அவர் எழுதறதைவிடவா சுவாரசியமா எழுதப்போறே.. இதுல சினேகா மட்டுமில்லாம மீனா படம் வேற !! அவர்கிட்ட மாட்டத்தான் போறே.. இருக்குடீ உனக்கு !!

27 comments:

Jawahar said...

அண்ணலும்-அவளும் நோக்கியதை தொடர்ந்து ஆராய்ந்து இன்னும் நிறைய சுவாரஸ்யமான செய்திகளைத் தந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற மூத்த பதிவாளர்களின் வலையில் நான் விழுவதில் மெத்த மகிழ்ச்சி.

http://kgjawarlal.wordpress.com

குரும்பையூர் மூர்த்தி said...

இலக்கியயத்தில் வரும் இனிதான காட்சிக்கு இன்னும் இனிதான விளக்கங்களை தந்து இருக்கிறீர்கள். வலையின் இன்னொரு பக்கத்தையும் (கவனிக்க #உம்#) பார்ப்பதில் சந்தோசம்

நாகை சிவா said...

சரி.. இப்ப என்ன தான் சொல்ல வறீங்கனு கேட்கலாம் னு பார்த்தால் இப்படி சினேகா படத்தை போட்டு வாய் மூட வச்சுட்டீங்களே அண்ணாச்சி :)

sriram said...

நான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சீமாச்சு.. said...

//உங்களைப் போன்ற மூத்த பதிவாளர்களின் வலையில் நான் விழுவதில் மெத்த மகிழ்ச்சி.//
ஜவஹர், என் பதிவுக்கு முதல் முறை வருகை தந்தமைக்கு நன்றி..

நானெல்லாம் மூத்த பதிவர் இல்லை ஐயா. சாதாரண இளைய பதிவர் தான். வயசு இப்பத்தான் (காதைக் கொண்டாங்க !!) ஆகுது..

அதுக்குள்ள மூத்த பதிவராக்கிடாதீங்க !!

சீமாச்சு.. said...

//இலக்கியயத்தில் வரும் இனிதான காட்சிக்கு இன்னும் இனிதான விளக்கங்களை தந்து இருக்கிறீர்கள். வலையின் இன்னொரு பக்கத்தையும் (கவனிக்க #உம்#) பார்ப்பதில் சந்தோசம்

//
வாங்க குரும்பையூர் மூர்த்தி சார். கம்பராமாயணத்துக்கெல்லாம் விளக்கவுரை எழுதறோமே.. என்ன மாதிரி வரவேற்பு இருக்குமோ என்று தயங்கித் தயங்கித்தான் எழுதினேன்..

படித்துப் பாராட்டியமைக்கு நன்றி..

சீமாச்சு.. said...

//சரி.. இப்ப என்ன தான் சொல்ல வறீங்கனு கேட்கலாம் னு பார்த்தால் இப்படி சினேகா படத்தை போட்டு வாய் மூட வச்சுட்டீங்களே அண்ணாச்சி :)

//

ராஜா.. சினேகா படத்தை மட்டும் பாக்கக்கூடாது. மேலேயும் கீழேயும் என்ன எழுதியிருக்குன்னு படிக்கோணும்..

அப்பத்தான் புரியும்..

சினேகாவுக்கும் சீதைக்கும் ஆரம்ப எழுத்து ‘S' என்பதால் மட்டுமே பொருத்தமாக இருக்கட்டுமே என்று சினேகா படம் போட்டேன்..

(எப்படியெல்லாம் விளக்கம் கண்டுபிடிச்சி எழுத வேண்டியிருக்குப் பாருங்க !!)

சீமாச்சு.. said...

//நான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுக்குறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

அட்டண்டென்ஸ் மார்க் பண்ணிக்கிட்டேன் ராஜா.. எப்ப பதிவைப் படிக்கிறாப்போல ஐடியா?

பழமைபேசி said...

//நானெல்லாம் மூத்த பதிவர் இல்லை ஐயா. சாதாரண இளைய பதிவர் தான்//

நம்பிட்டோம்...

கௌதமன் said...

பதிவைவிட சீமாச்சுவின் மனசாட்சி ரசித்து சிரிக்க வைத்துவிட்டது.
very good.

engalblog.

சீமாச்சு.. said...

//பதிவைவிட சீமாச்சுவின் மனசாட்சி ரசித்து சிரிக்க வைத்துவிட்டது.
very good.
//

வாங்க கௌதமன். என்ன பண்றது? அப்புறம் கேயாரெஸ் வந்து ஏதாவது விவகாரமா சொன்னப்புறம் மன்னிப்பு கேக்கறதுக்கு பதிலா முன்னாடியேக் கேட்டுடலாம்னுதான்..

என்ன சரிதானே !!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சாரி சீமாச்சுண்ணே! இப்போ தான் வர முடிஞ்சுது! அதுக்குள்ள விகடனுக்கும் யோசனை குடுத்து முடிச்சிட்டீங்க! :)

பதிவை அண்ணனு"ம்" நோக்கினீர்!
அடியேனு"ம்" நோக்கினேன்!
சூப்பரு! அருமையான வர்ணனை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடியேனு"ம்" நோக்கினேன்!//

சென்ற பின்னூட்டத்தில் இப்படிச் சொன்னது சினேகா+மீனா-வை!
உங்க இராமாயண வெளக்கத்தை அல்ல! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முதற்கண் திட்டமிட்டு சைட் அடிப்பதில் தவறொன்றும் இல்லையே! :)

அதனால் ஆக்சிடெண்ட்டாக இராமனும் சீதையும் நோக்கிக் கொண்டார்கள் என்ற விளக்கம் சுவைக்கு வேணுமானால் சரி! ஆனால் அடியேன் அதுக்கு "உம்" போட மாட்டேன்! அது புலவர் கீரனே ஆனாலும் :)

அவனு"ம்" சைடில் வந்தான்! இவனு"ம்" சைடில் வந்தான்! வண்டி இடித்து விட்டது! எனவே "உம்" என்பது ஆக்சிடெண்ட் என்று காட்டுகிறார்!

இப்போ நான் வேற மாதிரி சொல்றேன்!
அவனு"ம்" சைடில் பொடேர்-ன்னு போட்டான்!
இவனு"ம்" சைடில் அரிவாளால் வெட்டினான்! ஆளு க்ளோஸ்!
இங்கேயும் "உம்" வருகிறதே! இது என்ன ஆக்சிடெண்ட்டா? :))

ஆக, "உம்" என்பது தற்செயல் என்பதைக் காட்ட வந்தது அல்ல!

இராமனுக்குச் சீதை என்று ஒரு பெண் இருக்கிறாள்! மிதிலை இளவரசி! அவள் சுயம்வரத்துக்குத் தான் போகிறோம் என்பது முன்னரே தெரியும்! முனிவரும் அவள் அழகையும் குணத்தையும் விளக்கிச் சொல்கிறார்! பின்னர் சுயம்வரத்துக்கு அழைத்துச் செல்கிறார்!

சுயம்வரத்துக்குச் செல்லும் ஒரு மாப்பிள்ளைக்கு பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருப்பது இயல்பு தானே! எனவே அது திட்டமிட்டோ/ திட்டம் இடாமலோ,
சைட் அடிப்பதில் தவறொன்றும் இல்லை! இல்லவே இல்லை :)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்போ முனைவர். அண்ணல் இராமபத்ராச்சாரியார் அவர்களின் மாணவர், திருமிகு சீமாச்சு அவர்களின் விளக்கத்துக்கு வருவோம்! :)

//அவரும்” என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “அவர் என்னைப் பார்த்தார்” என்ற பொருள் மட்டுமா? “நான் அவரைப் பார்த்ததை அவர் பார்த்தார்” என்ற பொருள் வருகிறதில்லையா?//

இது விளக்கம்! :)
இன்னும் கொஞ்ச நேரத்தில் சீமாச்சு அண்ணன் என் கிட்ட மாட்டப் போறாரு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள்//

//ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா !!//

ஆக, செய்யவள் சீதை உனக்காக வெயிட்டிங்! மாடத்தில் வெயிட்டிங்! ஸோ, நீ ஒல்லை வா என்று கொடிகளே மெசேஜ் அனுப்புது!

இதுல இருந்தே தெரியலையா, இது திட்டமிட்ட சந்திப்பு-ன்னு? :)
சீதை மாடத்தில் நிற்க,
அதைக் கொடிகள் இராமனுக்கு உணர்த்த,
புரிந்து கொண்ட அவனு"ம்" ஒல்லை வர,
வந்த பின்....

அண்ணலு"ம்" நோக்கினான், அவளு"ம்" நோக்கினாள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யார் முதலில் நோக்கியது?
அண்ணலா? அவளா??

அண்ணலு"ம்" நோக்கினான் என்று இராமனை முதலில் சொல்வது போல் தெரியுது! அப்புறம் தான் அவளு"ம்" நோக்கினாள் என்பது போல் இருக்கு!

ஆனால் அப்படி இல்லை! அவள் தான் முதலில் நோக்கினாள்! :)

எண்ண அரு நலத்தினாள் இணையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலு"ம்" நோக்கினான் அவளு"ம்" நோக்கினாள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அதாச்சும் இராமன் முனிவரின் வேள்வி காக்க இராட்சசர்களை அழித்த வெற்றியில் இருக்கிறான்! அந்த வெற்றி மிதப்பில் தான் சுயம்வரத்துக்கு வருகிறான்!

அவன் நெஞ்சில் வெற்றி தான் குடி கொண்டிருக்கு! காதல் எப்போது குடி கொள்ளும்? காற்று வீசினால் தானே?

பூவோட பேச காற்று வீச வேண்டும் அல்லவா?
மனதில் ஈரம் சுரக்க வேண்டும் என்றால் (அலர்மேல்) மங்கை பார்வை பட வேண்டும்!

தாயார் பார்வை பட்ட பின்னரே, நாம் பெருமாளின் பார்வையில் ஒதுங்குவதும் இதனால் தான்!

வீரனைக் காதலன் ஆக்க, காதல் காற்று வீச வேண்டும்!
காற்றோ இயல்பாக வீசுகிறது!

காற்று வீசிய வீச்சில், பூவின் மணம், காதலன் புலனைத் தொட,
சட்டென்று திரும்பிப் பார்க்கிறான்!

* அவள் பார்ப்பதை இவனு"ம்" பார்த்து விட்டான்! = அண்ணலு"ம்" நோக்கினான்!
* அவன் பார்ப்பதை இவளு"ம்" பார்த்து விட்டாள்! = அவளு"ம்" நோக்கினாள்!

ஆண்மகன் அல்லவா? அம்பு விட்டே பழக்கப்பட்டவன் அல்லவா? அதனால் கவ்வுகிறது பார்வை! = கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று.....

என்ன தான் ஒரு பெண் முதலில் பார்த்தாலும் அது "கடைக் கண்" பார்வை தான்! "முழுக் கண்" பார்வை அல்ல!
ஆண்மகன் தான், பார்வையிலேயே ஒரு கண்ணியத்துடன், காதலுடன் நோக்கி, அவள் கண்களை அணுகி, அவளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்!

அதனால்.....
என்ன தான் சீதை முதலில் பார்த்திருந்து வீரனுக்கு காதல் பூக்கச் செய்தாலும்...
முதலில் அவன் தான் அணுகினான்...

= அண்ணலு"ம்" நோக்கினான்!

அவன் கண்ணில் உள்ள உண்மையான காதலையும், கண்ணியதையும் கண்டு

= அவளு"ம்" நோக்கினாள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சீமாச்சு அண்ணன் சொன்னது போல் அவள் பார்த்து விட்டதை அவனு"ம்" பார்த்து விட்டான்! அதனால் தான் கம்பர் "உம்" வைத்தார்!

ஆனால் அந்த "உம்"-மை இராமனுக்கு ஏன் முதலில் வைத்தார் என்றால்....

அவள் பார்வை கடைக் கண்" பார்வை தான்! "முழுக் கண்" பார்வை அல்ல!

அதனால் "முழுக் கண்" பார்வை பார்த்த அண்ணலை முன்னால் வைத்து = அண்ணலு"ம்" நோக்கினான்...

அதன் பின்னரே "முழுக் கண்" பார்வை பார்த்த அவளைப் பின் வைத்து = அவளு"ம்" நோக்கினாள்!

இது தான் அண்ணலு"ம்" நோக்கினான்!அவளு"ம்" நோக்கினாள்! என்பதின் உன்னதமான காதல் உள்ளுறை!

இந்த ஒத்தை வரியைப் படிக்கும் போதெல்லாம் என் மனம்....
என் மனத்தை....
அண்ணலு"ம்" நினைந்தான்!
நானு"ம்" நினைந்தேன்!
புனைந்தேன்! வனைந்தேன்!
இணைந்தேன்! நனைந்தேன்!
தேன்! தேன்! தேன்!

சீமாச்சு.. said...

//மனதில் ஈரம் சுரக்க வேண்டும் என்றால் (அலர்மேல்) மங்கை பார்வை பட வேண்டும்!

//

என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள் !! பதிவுக்கு வந்து இடுகையை ஆராய்ந்து விளக்கும் அளித்த..

“எங்கள் இணைய ஆழ்வார்” கேயாரெஸ் அவர்களை வருக வருக என வரவேற்று அமர்கிறேன்..

சீமாச்சு.. said...

//சென்ற பின்னூட்டத்தில் இப்படிச் சொன்னது சினேகா+மீனா-வை!
உங்க இராமாயண வெளக்கத்தை அல்ல! :)))
//

பார்த்துட்டீங்கல்ல. நான் மீனாவைப் பார்த்தேன்.. மீனாவுக்குக் கல்யாணம் ஆகிட்டுது.
நீங்க சினேகாவைப் பார்த்த முஹூர்த்தம் சினேகாவுக்கும் கல்யாணம் ஆகிட்டுதுன்னா என்ன பண்றது ? நிறைய பதிவர் பேச்சுலர்கள் தாடி வளர்க்க ஆரம்பிச்சிருவாங்க..

சீமாச்சு.. said...

கேயாரெஸ்,
//அண்ணலு"ம்" நோக்கினான் என்று இராமனை முதலில் சொல்வது போல் தெரியுது! அப்புறம் தான் அவளு"ம்" நோக்கினாள் என்பது போல் இருக்கு!

ஆனால் அப்படி இல்லை! அவள் தான் முதலில் நோக்கினாள்! :)
//

நல்ல விளக்கம் !! நாங்க கேயாரெஸ் வேலை, நான் எழுதறதில்லை ந்னு நெனச்சேன்.. எப்படியோ நல்ல பல விளக்கங்கள் உங்கள் வழியாகக் கிடைத்தது..

நன்றி!!

முகமூடி said...

ஒற்றை வரியில் இவ்வளவு விஷயங்களா? ஜவஹர், சீமாச்சு, கேயாரஸ் மூவருக்கும் நன்றி.

அப்புறம் மீனா சினேகா அப்படின்னு எல்லாம் நடு நடுல சொல்றீங்களே? அவங்க எல்லாம் யாரு?

சீமாச்சு.. said...

//முகமூடி said...
ஒற்றை வரியில் இவ்வளவு விஷயங்களா? ஜவஹர், சீமாச்சு, கேயாரஸ் மூவருக்கும் நன்றி.

அப்புறம் மீனா சினேகா அப்படின்னு எல்லாம் நடு நடுல சொல்றீங்களே? அவங்க எல்லாம் யாரு?
//

அண்ணா.. முகமூடியண்ணா !! வாங்க வாங்க.. ரொம்ப நாளாச்சு உங்க பின்னூட்டம் வாங்கி..

“புண்ணியம் செய்தனமே.. மனமே..” அப்ப்டீன்னு மனசு பாட ஆரம்பிச்சிடிச்சி..

தயவுசெஞ்சு உங்க பதிவுகளைத் தொடருங்களேன்.. ரொம்ப நாளா பார்த்துப் பார்த்து ஏமாந்துக்கிட்டிருக்கேன்..

sriram said...

அன்பின் வாசன்
இப்ப புரியுதா நான் ஏன் ஆஜர் மட்டும் போட்டேன்னுன்னு? KRS பதில்கள் வருமுன்னு தெரியும், வந்தாலும் எனக்கு எதுவும் புரியாதுன்னும் தெரியும்.
Beer இல்லாத இடத்தில் Irish காரனுக்கு என்ன வேலை? அதனால்தான் வெறும் ஆஜர் மட்டும் போட்டுட்டு Me the Escape
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சீமாச்சு.. said...

//KRS பதில்கள் வருமுன்னு தெரியும், வந்தாலும் எனக்கு எதுவும் புரியாதுன்னும் தெரியும்.
//

ஸ்ரீராம்.. கேயாரெஸ் பதில்கள் புரியலையா? அவரை விடத் தெளிவா யாரும் எழுத முடியாது ராஜா.. இன்னொரு தடவை படிச்சிப் பாரு ராஜா, புரியும்...

மீனா, ஸ்னேகா distractions இல்லாம படிச்சிப் பார்த்தால் எல்லாம் புரியும் :)

Jawahar said...

அண்ணா..

கல்லாதான் சொற்காமுறுதல் ங்கிற திருக்குறள் பற்றி எழுதியிருக்கேன்.(கையளவு பழுத்த கல்லாமை). நீங்களும் உங்க ரசிகர்களும் அதையும் ஒரு கை பாருங்களேன்?

http://kgjawarlal.wordpress.com