Tuesday, January 04, 2011

108. உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் சாராத இளைஞர்கள் !!

ஒவ்வொரு முறை மயிலாடுதுறை செல்லும் போது அங்கு உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் கொள்ளைகளையும் ஊழல்களையும் மக்களிடமிருந்து கேள்விப்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் தோன்றுவது என்னவென்றால்.. “ஏன் படித்தவர்கள், நாணயமானவர்கள், கட்சி சார்ந்து அரசியல் செய்யவேண்டிய தேவையில்லாதவர்கள்.. கௌரவமான பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.. தேவைக்கு அதிகமாக ஊழல் செய்து சம்பாதிக்கத் தேவையில்லாதவர்கள்.. உள்ளாட்சி தேர்தலில் நின்று நல்ல நிர்வாகம் தர முயற்சி செய்ய மாட்டேனென்கிறார்கள்? “ என்ற கேள்வி என் மனதில் எழுவதுண்டு. நான் ஓய்வு பெற்று இந்தியாவில் இருந்தால் உள்ளாட்சி தேர்தல் அமைப்பில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசையும் எனக்குண்டு..

என் ஆசைக்கு சார்பாக அவள் விகடனிலிருந்து ஒரு கட்டுரை..

oOo



சவி ராஜாவத் என்கிற 30 வயது இளம்பெண். எம்.பி.ஏ. படித்திருக்கும் இந்தப் பெண், ராஜஸ்தானின் பின்தங்கிய பகுதியான டோங் மாவட்டத்தின், சோடா எனும் தன் தாய் கிராமத்துக்காக, கார்ப்பரேட் நிறுவன பணியைத் துறந்து, அதன் பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார்! சேலைத் தலைப்பையே முக்காடாகப் போட்டுக் கொண்டு நடக்கும் பெண்களின் மத்தியில்... பிராண்டட் ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று நிற்கும் அந்தத் தலைவியின் தோற்றமே சுவாரஸ்யமாக்குகிறது சூழலை! பேச்சிலும் வேகம் இந்த மிஸ்ஸுக்கு!

''என் தாத்தா ரகுவீர் சிங், சோடா கிராமத்தில் மூன்று முறை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். என் தந்தை ராணுவத்துக்குப் பணியாற்றச் சென்றதால் நாங்கள் மட்டும் நகரவாசிகளாகிவிட்டோம். தாத்தா, பாட்டிஎல்லாம் ஊரிலிருந்த நிலங்களைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். ஜெய்ப்பூரிலிருந்து எப்போதாவது ஊருக்கு சென்று வருவதோடு சரி. இடைப்பட்ட காலத்தில் கிராமத்தில் வளர்ச்சியே இல்லாமல் போய், மிகமிக பின் தங்கிவிட்டது ஊர்.

இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் வரவே, எங்கள் கிராமத்தை பெண்களுக்கானது என்று அறிவித்துவிட்டனர். வழக்கமாக எங்கள் குடும்பமே தலைவராக இருந்ததால், கிராம மக்கள் 100 பேர் ஜெய்ப்பூரிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்து, விஷயத்தைச் சொல்லி, தேர்தலில் நிற்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது நான் டெல்லியில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மார்கெட்டிங் துறையின் தலைவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆந்திரா போர்டிங் ஸ்கூலில் படிப்பு, டெல்லியில் கல்லூரிப் படிப்பு, புனேவில் எம்.பி.ஏ., கார்ப்பரேட் வேலை என முன்னேறிச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் யோசிக்கவே... 'எதற்கும் ஒரு முறை நம் கிராமத்தைச் சென்று பார்த்துவிட்டு வந்து முடிவெடு’ என்றார்கள் வீட்டில்.

மாநிலத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போல், 'சோடா'வாசிகள் கால்நடைகளை வளர்க்க முடியவில்லை. மழை நீர் மட்டுமே நீராதாரம் என்பதால், அவற்றுக்குப் போதுமான தீவனம் கிடைப்பதில்லை. ஒரு சில பயிர்கள் மட்டுமே விளையும். அதுதான் இங்குள்ள சுமார் 7,000 பேருக்கும் சோறுபோடும் தொழில். இன்னும் அடிப்படை வசதிகள், சுகாதாரம் எனும் பல விஷயங்களிலும் பின்தங்கிய நிலைதான்.

கிராமத்துக்குச் சென்று சுற்றிப் பார்த்த எனக்கு, மிகவும் வருத்தமாகிவிட்டது. 'என் நிறுவனத்துக்கு என்னைப் போல் ஆயிரம் ஊழியர்கள் கிடைக்கலாம். ஆனால், என் கிராமத்துக்கு இப்போது நான் அவசியம் தேவை...’ என்று முடிவெடுத்தேன். 'நம்மால் புரட்சிகளை, மலர்ச்சிகளை கொண்டு வரமுடியாது. என்றாலும், மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளிகளை விதைக்க முடியும்' என்ற நம்பிக்கையை, என் படிப்பும், என் கிராம மக்கள் மீதான அக்கறையும் தந்தன. கடந்த பிப்ரவரியில் தேர்தலில் நின்றேன்!''


சவி ராஜாவத் மனு தாக்கல் செய்தவுடனே ஒரே ஒருவரைத் தவிர போட்டியில் இருந்த மற்ற 15 வேட்பாளர்களும் மனுவை வாபஸ் வாங்கியிருக்கின்றனர். அமோகமாக வென்றிருக்கிறார் ராஜஸ்தானின் புகழ்பெற்ற ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவரான இந்த ராஜகுமாரி.

இந்த குறுகிய நாட்களுக்குள் சோடா கிராமத்தினருக்கு தங்கள் தலைவி பற்றி அத்தனை நிறைவு. ''கிராமத்தின் முக்கியப் பிரச்னையான தண்ணீருக்காக மழை நீரை சேமிக்க கிராமத்து பெரியவர்கள் மற்றும் ஜெய்ப்பூரின் மண் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கேட்டு, கிராமத்தின் நூறு ஏக்கர் அளவிலான ஏரியை ஆழப்படுத்தினார் ராஜாவத். இதற்கு உதவியாக உடல் உழைப்பை கிராம மக்கள் சுமார் 3,000 பேர் தர முன் வந்தோம். சிறுவர்கள், பெண்கள், ராஜாவத்தின் பெற்றோர் உட்பட அனைவருமாக ஏரியை வெட்டியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது'' என பஜன்லால் கூற, தொடர்ந்தார் ஹீராபாய்...

''முன்பெல்லாம் மழை பெய்த சில மாதங்களில் ஏரி வறண்டு விடும். இப்போது ஆழமாக வெட்டப்பட்டுள்ளதால் அதிக நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஏரியை வெட்டும்போது அள்ளிய மண்ணை வெளியில் எங்கும் கொட்டாமல், ஏரியினுள்ளேயே குவித்து சிறிய தீவுகள் போல் செய்து விட்டார் எங்கள் தலைவி. அருகில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு, இப்போது இந்தத் தீவுத்திடல்கள் புகலிடமாகி விட்டன. இத்துடன், நூறு மரக்கன்றுகளையும் நட் டிருக்கிறார். இதெல்லாமே ராஜாவத்துக்கு கிடைத்த வெற்றி!'' எனப் புகழ்மாலை சூட்டினார்.

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மழை நீர் சேமிப்பு குறித்து ஒரு கருத்தரங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட ராஜாவத் அதில் கலந்து கொண்டு தனது கிராமத்தின் நிலை பற்றி பேசியுள்ளார். பிரச்னையை முறையாக எடுத்து வைத்ததைப் பாராட்டிய அமைச்சர், சோடா கிராமத்தின் மழைநீர் சேமிப்புக்காக 71 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறார்.

''அமைச்சர் அறிவிப்பு கொடுத்து விட்டாலும், பணத்தை பெறுவதற்கான ஃபைல்களை நகர்த்துவதில் பல்வேறு சுணக்கங்கள். கடந்த ஜூன் வரை 24.6 லட்ச ரூபாயை வாங்கி விட்டேன். பாக்கியைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். அரசு நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளியை இந்த அனுபவம் புரிய வைத்தது.

இதைச் சரி செய்ய என் போன்ற இளைய தலைமுறை பாலமாக இருப்பது அவசியம். இதுகுறித்து ஒருமுறை எஃப்.எம். ரேடியோவில் நான் அளித்த பேட்டி யைக் கேட்டுவிட்டு, தொழி லதிபர் ஒருவர் என் கிராம முன்னேற்றத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்! இதையெல்லாம் வைத்து, கிராமத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றும் வேலை களைத் தொடங்கிஇருக்கிறேன்'' என்று சொல்லும் ராஜாவத், சி.என்.என். சேனல் சார்பில், நாட்டிலுள்ள யங் லீடர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

''படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்துக்காகச் செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு மாறிவிடும்'' என்று கோரிக்கை விடுக்கும் சவி ராஜாவத், அவருடைய பெற்றோருக்கு ஒரே மகள். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை.

பஞ்சாயத்து தலைவி பணியோடு, தன்னுடைய பூர்விக நிலத்தில் விவசாயத்தையும் தற்போது தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். சுமார் 25 ஏக்கர் நிலம் இருந்தாலும், குறைந்த நீராதாரம் என்பதால், அதை வைத்து குறைந்த அளவில் கடுகு பயிரிட்டிருக்கிறார். இதெல்லாம் இவருடைய புகழை அக்கம் பக்கம் பரவச் செய்துகொண்டிருக்கிறது.

''ராஜாவத் அடிக்கடி நடத்தும் குறை கேட்கும் நாள் நிகழ்ச்சிகளுக்கும் கிராமத்தினரிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அருகிலுள்ள பஞ்சாயத்துக் களின் தலைவர்கள் மற்றும் தலைவிகள், இவரை அணுகி ஆலோசனை கேட்கத் துவங்கி விட்டனர். ராஜஸ்தானின் அரசியல்வாதிகளும் இவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால், ராஜாவத்துக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கலாம்'' என்று பெருமையோடு சொல்கிறார் பஜன்லால்!

வாழ்க இளைய பாரதம்!

4 comments:

சின்னப் பையன் said...

அண்ணே.. நானும் இதை பார்த்தேன்.

ஒரு ச்சின்ன டவுட். தென்சென்னை சரத்பாபுவும் இதே மாதிரி பஞ்சாயத்திலிருந்து ஆரம்பிச்சிருக்கணுமா? நேரடியா எம்.பிக்கு போட்டி போட்டது தப்பா?

சீமாச்சு.. said...

//தென்சென்னை சரத்பாபுவும் இதே மாதிரி பஞ்சாயத்திலிருந்து ஆரம்பிச்சிருக்கணுமா? நேரடியா எம்.பிக்கு போட்டி போட்டது தப்பா?//

வாங்க சத்யா !! நிச்சயம் அப்படித்தான் செஞ்சிருக்கணும்.. அரசியல் என்பது ஏட்டுச் சுரைக்காயுடன்.. கொஞ்சம் அதிக people skills தேவைப்படும் விஷயம். சரத்பாபுவின் படிப்பு பண்பட்டவர்களுடன் பழகுவதற்கு மட்டுமே அவருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கும்.. அரசியலில் அதற்கு மேலான people skills தேவை. அது உள்ளாட்சிகளில் பங்கெடுத்து மக்கள் பணியாற்றுவதன் மூலமே கிடைக்கும் என நான் நம்புகிறேன்..

சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மிக மதிப்புள்ளவை.. கூடிய விரைவில் அவற்றை பதிவு செய்வேன்..

வார்த்தை said...

நா ரொம்பயெல்லாம் ஆசப்படலங்க...

எந்த தலைவர்/தலைவி வந்தாலும் ,
போன தலைவர்/தலைவிய விட

ஜாஸ்தியா வேண்டாம், இணையா
டெவலப்மண்ட் அன்ட் சஸ்டெய்ன்மென்ட்
பண்ணிட்டு,

ஊழல மட்டும் போன ஆட்சியாளர்களை விட
கொஞ்சமாச்சும் கம்மியா பண்ணா போதும்.

Anonymous said...

மிகவும் அருமையானதொரு பதிவு ! அரசியலுக்கு இளைஞர்கள் வாருங்கள் என்றதும் முதலமைச்சர், பிரதமர் கோடி கோடி ஊழல் என்பதில்லை. நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள உள்ளாட்சிகளில் பங்கெடுத்த உங்கள் கிராமத்தை நவீனப்படுத்த உழையுங்கள் என்பதே ! அனைத்து இளைஞர்களும் வெற்றிபெற முன்னேற வாழ்த்துக்கள் !