Saturday, July 08, 2006

21. இராவணன்.. இராமர் கிட்டே.. ஏன் தோத்தார் .. தெரியுமா?

1985..
நான் மயிலாடுதுறையில்.. கல்லூரியில் M.Sc. (கணிதம்) படித்துக் கொண்டிருந்த காலம். எனது நண்பர்கள் எல்லோருமே ஒரு ஒரு விதத்தில் ஒரு மாதிரியானவர்கள். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்..

சாம்பிளுக்குச் சொன்னால்., நம்ம வீர படையாச்சி சிவகுருநாதனைச் சொல்லலாம். அவனுக்குத் தான் ஒரு "வீரபடையாச்சி" என்பதில் ஏகத்துக்குப் பெருமை. அப்பொழுதுதான் இராமதாஸ் வன்னிய சங்கம் ஆரம்பித்து கொஞ்சம் வெற்றியடைய ஆரம்பித்திருந்ததால்.. அவனுக்கு அந்த பெருமை வேறு..யாரையாவது பத்தி ..ஏதாவது சொன்னாலும் .. "அவனை ஆஃப் பண்ணனும் மாப்பிள்ளே.. ரொம்ப துள்ளறான்.." அப்படீன்னு.. உடனே உலைச்சோறு கணக்கா கொதிக்க ஆரம்பித்துவிடுவான்... அப்பப்ப அங்க இங்க போய் ஏதாவது வம்பு தும்பை விலைக்கு வாங்கி வருவதுதான் இவன் வாடிக்கை... இவனை மாதிரி நிறைய "திராவிட ராஸ்கோல்கள்" நமது நண்பர்கள்..

சில நண்பர்கள் படிக்காதவர்கள்... இருந்தாலும் காலேஜ் பசங்ககூட ப்ரெண்டா இருந்தால் அவங்களுக்குப் பெருமை-ன்னு நம் வட்டத்தில் நட்பு பாராட்டி வருபவர்கள். அடிக்கடி நழுவும் ஒரு பாலியெஸ்டர் வெள்ளை வேட்டி அத்துடன் கொஞ்சம் பளபளப்புடன் கூடிய மஞ்சள் அல்லது கருநீல சில்க் சட்டை (இது அந்தக் காலத்தில் ரொம்ப பேமஸ்) இதுதான் சிலரின் காஸ்ட்யூம். சைக்கிளில் தான் வருவார்கள். சைக்கிள் ஒட்டும் போது வேட்டியைத் தொடை தெரிய மடித்துக் கட்டிக்கொள்ளவேண்டும். அப்பத்தான் அவங்களுக்கு ஒரு கெத்து (இது என்ன மொழி வார்த்தைங்க..).

அக்ரஹாரத்தில் இப்படி பலவிதமான ஆட்கள் வீட்டுக்கு நம்மைத் தேடிவருவதால் எனக்கே என் தெருவில் ஒரு மாதிரியான பேருதான்.. அது போகட்டும்.. விடுங்க...

oOo

இப்படி நண்பர்கள் இருந்தால் சண்டை வராமல் இருக்குமா.. வந்ததே..குழு இரண்டாக உடைந்தது. வழக்கமான சண்டைகளை விட கொஞ்சம் பெரிய சண்டை... அடிதடி.. எளிதில் உணர்ச்சி வசப்படும் நண்பர்களாதலால்.. அங்கு ஒரு நியாயமான தர்க்கத்துக்கே இடமில்லாமல் போய்விட்டது..

முட்டி மோதி சண்டை மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து நின்றது..
ஒரு வியாழக்கிழமை மாலை 7 மணி...
ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றி மாற்றி புகார் சொல்லிக் கொண்டு... எல்லோரும் சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் அலுவலக வாசலில் கூடிக் கூடி பேசிக்கொண்டிருந்தோம். .... சப் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பிஸி.. அதனால் நாங்களே அவர் கவனத்துக்காக காத்திருந்தோம். என்னதான் தீர்வு என்பது இன்னும் எங்களுக்கே தெரியவில்லை..

அங்கிருந்த ஒரு எழுத்தர்.. அவர் பெயர் தெரியவில்லை... எங்களை ஆரம்பத்திலிருந்தே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்...மெதுவாக எழுந்து எங்கள் அருகில் வந்தவர்.. எங்களில் முக்கியமாகப் பட்டவர்களை ஒரு ஓரமாக ஓட்டிக் கொண்டு வந்தார்..

"தம்பிங்களா.. இப்படி வாங்க.."

"ஐயா கொஞ்சம் பிஸியாக இருக்காங்க.. நீங்கள்ளாம் கொஞ்சம் எங்க கூட வெளியே வரீஙகளா.."

எங்களை ஓட்டிக் கொண்டு வெளியே வந்தவர்.. அங்கே அருகாமையில் உள்ள ஒரு டீக்கடையின் வெளிப்புறத்துக்கு அழைத்துச் சென்றார்..

"அண்ணே.. தம்பிக்கெல்லாம் ஒரு டீ போடுங்க.."

சட்டைப் பையிலிருந்து பணம் எடுக்கப் போன என்னைக் கையமர்த்தி..
"நீ தரவேணாம் தம்பி... நானே கொடுத்திருவேன்.. கவலைப் படாதீங்க..

படிக்கிற புள்ளைங்க கிட்டேருந்து நான் காசு வாங்கறதில்லை தம்பீ... உங்ககிட்ட காசு வாங்கினால் அது உங்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாப் போயிடும்.. தயவு செஞ்சு பணத்தை உள்ளே வையுங்க.. எங்களுக்கெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சால் உங்களுக்குக் கட்டுப்படியாவாது.."

எழுத்தர் என் மதிப்பில் அதிகவே உயர்ந்தார்..

'அப்புறம் தம்பீங்களா.. யார் யாரு என்னென்ன படிக்கிறீங்க.."

அங்கிருந்த எங்கள் டென்சனைக் குறைப்பதற்காக சில சம்பிரதாயமான கேள்விகள்... எல்லோர் வயிற்றிலும் சூடான டீ இறங்கி ஒரு மிதமான மனநிலையைக் கொடுத்திருந்தது..

எழுத்தர் தொடர்ந்தார்..

"எல்லோரும் ராமாயணம் படிச்சிருக்கீங்களா..?"
"இராவணனுக்கு எத்தனை தலை?.. எத்தனை கைகள்? 10 தலை இருபது கைகள்.."
"அவன் சிறப்பு தெரியுமா..? அவன் ஒரு பெரிய சிவ பக்தன்..கைலாய மலையையே ஒரு கையால தூக்க முயற்சி பண்ணினவன்.."

"தினமும் காலையிலே 8 திசையானைகளோட சண்டை போட்டு ஜெயிச்சு பயிற்சி செய்பவன்.. "
"இராவணனைப் பத்தி இன்னும் நிறைய சொல்லலாம்.."

"இராமன் யாரு தெரியுமா ? உன்னையும் என்னையும் மாதிரி ஒரு சாதாரண மனுஷன்.. அவருக்கு ரெண்டு கை .. ரெண்டு கால்.. ஒரு தலை.. அவ்வளவுதான்.."

"இப்படியிருந்த இராமன் இராவணனை ஏன் ஜெயிச்சாருன்னு நீங்க யாராவது சொல்ல முடியுமா..?"

"ஏன்னா.. இராமர் ஒரு சாமி சார்.." - எங்களில் ஒரு முந்திரிக் கொட்டை..

எழுத்தர் தொடர்ந்தார்..

"அது தான் இல்லை.. இராவணனின் எல்லா பலங்களும்... பலவீனங்களும்.. இரகசியங்களும் தெரிந்த அவனின் தம்பி விபீஷணன்.. அவனிடமிருந்து பிரிஞ்சி... இராமர் பக்கம் வந்து சேர்ந்துட்டான்.."

"விபீஷணன் மட்டும் அப்படி வந்து சேரலைன்னா.. இராமர் ஜெயிச்சிருகிறது சந்தேகம் தான்.."
"நீங்க இப்போ சண்டை போட்டுக்கிறது யார் கூட..? இத்தனை நாளு உங்க கூட தாயா புள்ளையா பழகிக்கிட்டிருந்து உங்களைப்பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கிற உங்க ப்ரெண்டுங்க கூடத்தான்.."

"அப்படியிருக்கும் போது யார் ஜெயிச்சாலும் தோத்தாலும்... வலிக்கப்போறது எல்லாருக்கும்தான்.... அப்படியே நீங்க ஜெயிச்சாலும் அதுக்கு நீங்க கொடுக்க வேண்டிய விலை உங்களோட இந்த மாண்வப்பருவத்துல ரொம்ப பெருசா இருக்கும்..'

...
...
இப்படியே தொடர்ந்தார் அந்த தெய்வம்...

அவர் பேசப் பேச நாங்கள் செய்த தவறு எங்களுக்கு உறைத்தது..

"இனிமே நீங்க படிக்கிற காலத்துல் இந்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வராதீங்க...

நீங்களெல்லாம் இங்க வரக்கூடாதுன்னுதான் எங்க ஆசையே...

உள்ள போயி ஐயா கிட்ட நாங்களெல்லாம் ராசியாயிட்டோம ஐயா.. ன்னு சொல்லிட்டு.. பத்திரமாக வீட்டைப்பாக்கப் போய் சேந்துக்குங்க...
"

செஞ்சோம்.. மந்திரத்துக்குக் கட்டுண்ட பூனை மாதிரி.. மனசெல்லாம் பூக்களாக கொஞ்ச காலம் திரிஞ்சோம்...
வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை அன்று அந்த போலீஸ்காரர் எனக்குப் புரியவைத்தார்..

அவர் யாரென்று எனக்கு இன்று நினைவில்லை.... அவர் யாராயிருந்தாலும்.. என்னை ப்பொறுத்த வரை ஒரு மாதிரி மனிதன்....

oOo



6 comments:

Anonymous said...

Really nice :) A good man.

துளசி கோபால் said...

உங்க நல்ல காலம்தான் அப்படி ஒருத்தர் அன்னிக்கு அங்கே இருந்துருக்கார்.

வாழ்க்கையிலே மறக்கக்கூடாத பாடம். இல்லையா?

மா சிவகுமார் said...

சீமாச்சு,

சரியான பாடம். காவல் நிலையங்களிலும் இப்படி நல்ல ஆன்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உள்ளே நுழைபவர்களை குரங்கு கை பூமாலையாகப் பிய்த்துப் போடும் விதமாகவே நம்முடைய காவல் நிலையங்களும் நீதி முறைகளும் இருக்கின்றன.

அன்புடன்,

மா சிவகுமர்

ரங்கா - Ranga said...

சீமாச்சு,

அருமையான பாடம். இராமாயணம் பற்றி பள்ளியில் படிக்கும் போது கேட்டது இது. 'விபீஷணன் மட்டும் அல்ல, சுக்ரீவன் இல்லையென்றால் வாலியை முறியடிக்க இராமனால் முடிந்திருக்காது. அதே போல லக்ஷ்மணனின் துணை இல்லாமல் இராமனால் பதினான்கு வருட வனவாசமும் அனுபவித்திருக்க முடியாது' என்று என் தமிழாசிரியர் சொல்லியிருக்கிறார். சகோதரர் (அல்லது நெருங்கிய நண்பர்கள்) இல்லாமல் தனி மனிதனாக வெற்றியடைந்தவர்களை நான் பார்த்ததில்லை.

ரங்கா.

சீமாச்சு.. said...

//வாழ்க்கையிலே மறக்கக்கூடாத பாடம். இல்லையா?

ஆமாம் துளசியக்கா... அதை சொல்லிக் கொடுத்தவரும் மாணவ சமுதாயத்தின் மேலே எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தார் பார்த்தீங்களா?

நன்றி மா சிவகுமார். எப்படி நாம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் காவல்துறை பற்றி கட்டுரைகள் எழுதினோம் பாருங்க..

நன்றி ரங்கா..உங்கள் தமிழாசிரியர் உங்களுக்கு வகுப்பிலேயே இதைச் சொல்லிக்குடுத்திருக்கார்.
நமக்குத்தான் காவல் நிலையம் வரை செல்ல வேண்டியிருந்தது.

சீமாச்சு...

நாகை சிவா said...

தெய்வங்க அவர்.