Tuesday, July 22, 2008

67. உயிரைத் திருப்பித் தருவேனோ...

1980 களில்.....

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். வழக்கம் போல் நண்பர்கள்
அதிகம். என்னுடன் சுற்றிக் கொண்டிருந்த நண்பர்களில் கண்ண்னும் குருநாதனும் முக்கியமானவர்கள். நாங்கள் மூவரும் சேர்ந்து சுற்றிய இடங்கள் நிறைய.

அப்படி ஒரு நாள் மதிய வேளையில்.. நாங்கள் காவிரிக் கரையோரமாக பொறுக்கிக் கொண்டு திரிந்த போது ஓரு இடத்தில் காவிரி அழகாக ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் அடர்ந்த மரங்கள் ஜன நடமாட்டம் அதிகமாக இல்லாத இடம். ஆபத்துக்களும் அதிகம் இருந்தது தான்.. ஆனால் அதைப் பொருட்படுத்தும் வயதுமல்ல அது..


திடீரென்று ஒர் ஆசை கண்ணனுக்குத் தோன்றியது..


"மச்சி.. இங்க இறங்கி கொஞ்ச நேரம் நீஞ்சிட்டுப் போகலாமே..."

கண்ணனுக்கும் குருநாதனுக்கும் நீச்சல் தெரியுமாதலால்.. அல்லது அது போல் இருவரும் நினைத்துக் கொண்டதால்.. உடனே இறங்கி விட்டனர்..

எனக்கு இது போல் நினைத்த இடத்தில் ஆடை களைந்து குளித்துப் பழக்கமில்லை..

நானெல்லாம் வெறும் கிணத்த்டி.. பாத்ரூம் குளியல் ஆசாமி.. ஓரே பிள்ளை என்ற சுய பாதுகாப்பில்.. அம்மா என்னைக் காவிரிக்குக் குளிக்க அனுப்பியதில்லை... அப்ப்டி அனுப்பினாலும்.. யாராவது அக்ரஹாரத்து மாமாக்கள்.. ஒரு தடவைக்கு நாலு தடவை.. "பயப்படாதீங்கோ மாமி.. நானாச்சு.. உங்க புள்ளையாண்டானாச்சு... பத்திரமாக் கொண்டுவந்து சேத்துடறேன்" என்று உறுதி மொழி கொடுத்தாலும்.. அம்மா..
"ஆக்கூர் சீனிவாசய்யர் புள்ளை காவேரியில குளிக்கும் போது ஆத்தோட போயிட்டான்.. அவர்ட்ட காசு பணம் இருந்தது.. அவர் ஆளு வெச்சு தேடி.. பாடியைக் கண்டுபிடிச்சார்..... நீ ஆத்தோட போயிட்டீன்னா.. என்னால தேடற் வசதியில்லைடா...பத்திரமா வாடா..." என்று ஆயிரத்தெட்டு ஜாக்கிரதை சொல்லி.. அப்புறமும் அரை மனதோட தான் அனுப்புவாள்..

இருந்தாலும் அம்மாவுக்கு சமையலில் மனசு நிக்காது.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு..எல்லா சாமிகளையும் வேண்டிக் கொண்டிருப்பாள்..

அவள் கவலை அவளுக்கு...

பெற்ற வயிறு.. அதுவும் அப்பா டில்லியில் தனியா இருக்கும் போது ..தகப்பனுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே என்ற பொறுப்பும் சேர்ந்து கொண்டது..

இந்த அழகில நான் எங்கே நீச்சல் கத்துக் கொள்வது...

அம்மாவின் வசனங்கள் நினைவில வரவே.. நான் மறுத்துவிட்டேன்..

இருந்தாலும்.. கண்ணன் நச்சரித்துக் கொண்டேயிருந்தான்.. நாங்க பாத்துக்க மாட்டோமா.. வாடா.. வாடா... என்று செமை புடுங்கல்...

மானசீகமாக அம்மாவை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு.. அவள் வேண்டும் தெயவங்கள் என்னைக் காப்பாற்றாதா.. என்ற நப்பாசையுடன்.. நானும் காவிரியில்...


அரை மணி நேரம் தண்ணியில் அளைந்தது.. கொஞ்சம் தைரியம் தர.. நகர்ந்து நகர்ந்து.. ஆழத்துக்கு வந்து விட்டிருந்தேன்.. எனக்கும் கண்ணனுக்கும் 10 அடி தூரம்.,.. எனக்கும் குருநாதனுக்கும் ஒரு 30 அடி தூரம் இருக்கும்.. நான் கூப்பிட்டால் கூட தண்ணிரின் இரைச்சலில் குருநாதனுக்குக் கேட்க வாய்ப்பில்லை..

"கண்ணா.. கண்ணா.. காப்பாத்துடா.. மாட்டிக் கிட்டேண்டா...".. முதல் முழுக்கு...

உடனே வந்து காப்பாற்ற இவன் துவாரகைக் கண்ணனில்லை.. வெறும் மயிலாடுதுறை கண்ணன் தான்.... அவனுக்குத் தெரிந்த நீச்சல் அவனைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே போதுமானது.. இன்னொருவரைக் காப்பாற்றுமளவுக்கு அவனுக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை..

"கண்ணா.. இங்க பாருடா.." -- இரண்டாம் முழுக்கு...

குரு இருக்குமிடம்.. கண்ணில் தெரியவில்லை.. அரை மணி தண்ணிரில் ஆடியதில் கண் சிவந்திருந்தது...

"அம்மா.." -- மூன்றாவது முழுக்கில் நான்.. க்க்கீழே.. போய்க்கொண்டிருந்தேன்..

நதியில் சுழல்...

எப்படித்தான் வந்தானோ.... அம்மா அப்பா செய்த புண்ணியமோ...அந்த தெய்வம் தானறியும்...

பாய்ந்து வந்து என் ஒரு கால் பற்றி.. சுழற்றி.. என்னைக் கரை சேர்த்தவன் குரு..

அந்தத் தருணம் மறக்க இயலவில்லை...

இந்தப் பதிவு எழுதும் போது கூட.. அந்தக் கணத்தின் பயம் வயிற்றில்
பரவுகிறது..

oOo..வாழ்க்கையில் நாங்கள் சென்ற திசைகள் வேறு வேறு... குருநாதன் பற்றி..எந்த விவரங்களுமில்லை..


சென்ற வாரம்.. யாருடனோ பேசிக்கொண்டிருந்த போது.. தான் அவனனப் பற்றி அறிய நேர்ந்தது....இதயத்தில் இரத்த உறைவு காரணமாக குருநாதன் சென்னை பொது மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகத்தெரிந்தது..

சொன்னவரிடம் செய்தி தான் இருந்ததே தவிர தொலைபேசி எண்களில்லை..

யார் யாரையோ பிடித்து.. அவன் தொலைபேசி வாங்கித் தொடர்பு கொண்டேன்..

அவனுக்கு அல்சர் இருக்கிறதாம்.. அதற்காக சில வ்ருடங்களாக ஏதோ மாத்திரைசாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.. யாரோ மருத்துவர் சொன்னதின் பேரில் அதைதிடீரென்று நிறுத்தி விட்டிருக்கிறான்.. அது அவன் இதயத்தில் blood clot-ல் கொண்டு விட்டது.. இதயத்தின் இடது வெண்ட்டிரிக்க்ளில் ஒரு பெரிய உறைவு..அதன் ஒரு பகுதி இடது காலுக்குச் சென்று விட்டதால்... இடது கால் இயக்கம் இழந்துவிட்டிருந்தது..


அவனிடம் பேசிய போது... அவனுக்கு உயிர் வாழ்வதற்கான ஆசைகள் போயிவிட்டிருந்ததுதெரிந்தது.. மருத்துவத்துக்கு செலவு செய்ய அவனிடமும் அவன் மனைவியிடமும் வசதிகளில்லை...


பேசி முடித்தவுடன் .. என் சென்னை நண்பர்களிடம் உடனடியாகப் பேசி.. அவனை ராமச்ச்ந்திரா மருத்துவமனைக்கு (இதய மருத்துவர் டாக்டர் தணிகாசலம் அவர்களிடம்) அவனைக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்...

எல்லா மருத்துவ செலவுகளும் என் பொறுப்பில் தருவதாக உறுதி தந்து விட்டு.. அவனுக்குச் சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்க எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்..

தினமும் காலையும் இரவும் அவனிடமும் அவன் மனைவியிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்..

அவர்களின் பேச்சில் இப்போது நம்பிக்கை தெரிகிறது.. இன்னும் சிகிச்சைக் குறித்தான முடிவுகள் எடுக்கப் படவில்லை.. ஓரிரண்டு வாரங்களாகலாம்....


சமயத்தில் என்னை அவனிடம் அனுப்பி வைத்த தெய்வம் அவனைக் காப்பாற்றாமலாப் போய்விடும்.....

அவனைக் காப்பாற்றி அவன் மனைவியிடமும் அவன் இரு பெண் குழந்தைகளிடமும் சேர்க்கும் நாளில்.. என் மனம் ஆறுதலடையலாம்...

வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசாமி.. துணை..

3 comments:

கயல்விழி முத்துலெட்சுமி said...

அவருக்கு நல்லபடி குணமடைய பிரார்த்திக்கிறேன்..

Seemachu said...

நன்றி.. கயல்விழி முத்துலெட்சுமி..

நம் பிரார்த்தனைகள் அவரைக் காப்பாற்றும் என நம்புகிறேன்...

ஆயில்யன் said...

வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசாமி.. துணையுடன் நல்ல குணம் பெற்று மீண்டும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் வேலை வரும் என்று நம்பிக்கையோடு இறைவனை வேண்டுகிறேன் !