Thursday, July 20, 2006

23. அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவை உரையாற்றிய நமது அமைச்சர்...

இந்தியா போன்ற ஒரு பெரிய குடியரசின் சுகாதார அமைச்சர் அமெரிக்கா வந்திருந்து ஒரு பெரிய பலகலைகழகத்தில் ஆற்றிய உரை குறித்தான பதிவு.
ஒரு அன்புமிகு நண்பர் இதைப் பதிந்ததற்கான காரணத்தை இங்கு இவ்வாறு கூறுகிறார்.


  • காரணம் நம் தமிழ் பத்திரிக்கைகள் நம் தமிழரின் பெருமைகளை சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைக் கொடியில் உள்ள தமிழனுக்கு செய்திகளை தருவது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டால் அவனுக்கு தெரிய படுத்துவது நம் தமிழ்ப் பத்திரிக்கைகளின் கடமை



  • அமைச்சர் அன்புமணி John Hopkins University School of Medicineல்ஓர் கருத்து அரங்கிற்கு வந்து இருந்து, இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார். அதாவது தமிழகத்தில் இருந்து வந்த ஓர் மத்திய அமைச்சர் அழகு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்குப் பிறகு இவரைத்தான் நான் பார்க்கிறேன். அவருடைய பேச்சின் பொழுது ஒரு முறை கூட எந்த குறிப்புகளையும் அவர் சரி பார்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டும் அல்ல, அனைத்து புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருந்தார். சில சில இடங்களில் நகைச் சுவையாகவும் பேசினார். அங்கு வந்து இருந்த அனைத்து மக்களும் நிரம்ப படித்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், மாணவர்கள் அனைவரும் அவருடைய பேச்சை மிக ரசித்தார்கள். மொத்ததில் அந்த 3 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. ஓர் தமிழனாக அன்பு மணியின் செயல் பாடுகளில் பெருமைப் பட்டு கொள்ள நிறைய இருக்கிறது

அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசிய பேச்சின் முக்கியத்துளிகள் என John Hopkins University வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரையிலிருந்து சில குறிப்புகள்:

  • இந்தியாவிலே ஏறக்குறைய 52 லட்சம் இந்தியர்கள் எய்ட்ஸ் நோயினால் (HIV வைரஸால்) பாதிக்கப் பட்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் ஒரே ஒரு லட்சம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
  • AIDS பரிசோதனை செய்து கொள்ள மக்கள் முன்னுக்கு வரமாட்டேனென்கிறார்கள். ஏனென்றால்.. தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று சமூகத்துக்குத் தெரிவிப்பது ஒரு கெளரவக் குறைவு என்று நினைக்கிறார்கள்
  • குறைந்த பட்சம் 30 லட்சம் காப்புறை விற்கும் கருவிகள் இந்தியாவிற்குத் தேவை. இந்த வருட இறுதிக்குள் ஒரே ஒரு லட்சம் கருவிகள் மட்டுமே நிறுவப்படலாமென்று அரசு நம்புகிறது.
  • இந்தியாவுக்கு குறைந்த பட்சம் 50,000 ஒருங்கிணைந்த பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் தேவை. தற்போது வெறும் 2300 மட்டுமே உள்ளது.
  • மொத்தம் 620,000 கிராமங்களில் எய்ட்ஸ் பற்றி ஆலோசனை சொல்லக்கூடிய சமுக சேவகர் தேவை. ஆனால் நம்மிடம் வெறும் 88,000 சமூக சேவகர்கள் மட்டுமே உள்ளனர்.

நமது நாட்டின் மத்திய சுகாதார அமைச்சரின் முன்னால் எவ்வளவு பெரிய ப்ரச்சினை இருக்கிறது?

இங்கே அமெரிக்காவில் விஞ்ஞானிகள் மட்டும் பல தரப்பட்ட முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் பேசும் போது எவ்வளவு பெரிய பொறுப்புடன் கலந்தோலோசித்து அவர்களிடமிருந்து திட்டங்களையும் நிதியையும்.. ஆலோசனைகளையும் பெற்றிருக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சரிடம் எந்தவொரு குறிப்பும் இல்லை.. எந்தக் குறிப்பையும் பார்க்காமல் "அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவையுடன்" பேசினார் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு பொறுப்புள்ள படித்த இந்தியக் குடிமகன் எழுதுகிறார். !!!!!

நகைச்சுவையுடன் பேசக்கூடிய ப்ரச்சினையையா பேசியிருக்கிறார் ? ஒர் பொறுப்புள்ள அமைச்சராக நிறைய குறிப்புக்களுடனும் கவலையுடனும் ஆதங்கத்துடனும் அல்லவா பேசியிருக்கவேண்டும்.

"பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி" க்கு "நம்ம ச்சின்ன அய்யா அமெரிக்காவில் 40 நிமிடம் ஆங்கிலத்தில் புத்தகத்தைப் பார்க்காமல் பேசினார்" என்பது தெரிந்தால் போதுமா? அதுவா பெருமை இங்கு?

அவர் ஆங்கிலத்தில் 40 நிமிடம் குறிப்பைப் பார்க்காமல் பேசியது என் பெருமை கிடையாது. அவர் ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் பேசட்டும்.. தமிழ்.. தெலுங்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசட்டும்.. எனக்கு அவர் மொழிப்புலமை பற்றியோ அவர் மொழியார்வம் பற்றியோ எனக்குக் கவலையில்லை.. அவர் என்ன பேசினார்.. எப்படி பேசினார்.. என்பது தான் எனக்கு முக்கியம். நமது நாட்டின் முன்னேயுள்ள ப்ரச்சினையையும் அதன் தீவிரத்தையும் எவ்வளவு தூரம் அயல் நாட்டு அறிஞர்கள் மற்றும் கொடையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் என்பது முக்கியம். அவர் கையில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை எவ்வளவு கவனமாகக் கையாளுகிறார் என்று மக்கள் மனதில் அவர் ஏற்படுத்தவேண்டிய தாக்கம் முக்கியம்.

அமைச்சர் அன்புமணியின் மேல் எனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர் மேல் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு முக்கியமில்லை.. என் நாட்டு மக்களுக்காக அவர்களின் சுகாதார முன்னேற்றத்துக்காக அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தான் எனக்கு முக்கியம்.

இதே அன்புமணி அவர்கள் நமது மக்களிடமோ அல்லது கருத்தரங்கிலோ " குறைந்த பட்சம் 30 லட்சம் காப்புறை விற்கும் கருவிகள் இந்தியாவிற்குத் தேவை. இந்த வருட இறுதிக்குள் ஒரே ஒரு லட்சம் கருவிகள் மட்டுமே நிறுவப்படலாமென்று அரசு நம்புகிறது. ஒரு கருவி ஒரு இடத்தில் நிறுவ 200 டாலர் செலவாகிறது.. இங்கு கூடியுள்ள ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியனும்... இந்தியாவின் ..இந்தியர்களின் சுகாதாரத்தின் மேல் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஒரேஒரு கருவிக்காவது பொறுப்பேற்க வேண்டும் என்று பொறுப்புடனும் ஆதங்கத்துடனும் கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு ஆயிரம் கருவிகளுக்காவது நன்கொடை வந்திருக்காதா? நான் மட்டுமே ஒரு பத்து கருவிகளை நிறுவ நன்கொடை வசூலித்திருக்க முயலமாட்டேனா? அமைச்சரின் மேல நான் தான் எவ்வளவு பெருமைப் பட்டிருப்பேன். பத்திரிக்கைகள் தான் எவ்வளவு பெருமைப் பட்டிருக்கும்?

அன்பு நண்பர் சிவா.. உங்கள் மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது. நாமிருவரும் மயிலாடுதுறை தான்.. நாமிருவரும் சென்றவருடம் இதே நேரத்தில் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறோம். தயவு செய்து இதை உங்களை நோக்கிய ஒரு தனிமனித தாக்குதலாக நினைக்காதீர்கள்.. இது உங்களை நோக்கியது அல்ல. இது என் மனதின் ஆதங்கம் மட்டுமே.

அன்பு வலைப்பதிவு தோழர்களே.. தயவு செய்து இதில் கட்சி மட்டும் சாதி சார்ந்த குறுகிய வட்டத்துக்குள் அடைக்காதீர்கள்.

பின்குறிப்பு: இந்தக் குறிப்பு, பதிவை எழுதியபின்பு, அமைச்சர் அன்புமணி அவர்களின் பேச்சின் முழு வீடியோப் பதிவைப் பார்த்தபின்பு எழுதப்பட்டது.

அமைச்சர் அவர்களின் பேச்சு மிகப் பொறுப்பான முறையிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அவரின் முழுப் பேச்சின் வீடியோவையும் பார்த்தேன். மிகச் சிறப்பான முறையில் பேசியிருக்கிறார். குறிப்புக்களையும் அவ்வப்பொழுது பார்த்து கவனமுடன் தெளிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சரவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

அவர் பேச்சின் முழு வீடியோப் பதிவும் இங்கு உள்ளது

http://commprojects.jhsph.edu/_media/india_presentation_hi.ram

- சீமாச்சு.

அமைச்சர் அன்புமணியின் பேச்சு குறித்து நண்பர் சிவாவின் பதிவு

8 comments:

Anonymous said...

அன்புமணி என்ன பேசினார் என்பதே தெரியாமல் நீங்கள் தான் நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

அவர் நகைச்சுவையாக பேசவில்லை. தெளிவாக புள்ளிவிபரங்களுடன் பேசினார்.

பேச்சை கேட்க விரும்புவர்கள் இந்த தளத்தில் கேட்கலாம்

http://www.jhsph.edu/publichealthnews/media_archive/index.html

வேல்பாண்டி said...

//நமது நாட்டின் மத்திய சுகாதார அமைச்சரின் முன்னால் எவ்வளவு பெரிய ப்ரச்சினை இருக்கிறது?

இங்கே அமெரிக்காவில் விஞ்ஞானிகள் மட்டும் பல தரப்பட்ட முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் பேசும் போது எவ்வளவு பெரிய பொறுப்புடன் கலந்தோலோசித்து அவர்களிடமிருந்து திட்டங்களையும் நிதியையும்.. ஆலோசனைகளையும் பெற்றிருக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சரிடம் எந்தவொரு குறிப்பும் இல்லை.. எந்தக் குறிப்பையும் பார்க்காமல் "அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவையுடன்" பேசினார் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு பொறுப்புள்ள படித்த இந்தியக் குடிமகன் எழுதுகிறார். !!!!!

நகைச்சுவையுடன் பேசக்கூடிய ப்ரச்சினையையா பேசியிருக்கிறார் ?
//

அமெரிக்காவின் விஞ்ஞானிகள் முன்பு கண்ணீர் விட்டு கதறியழுது பேசித்தான் அன்பு தன் அமைச்சர் பொறுப்புக்கு மகுடம் சூட்ட முடியுமா? மரணத்தறுவாயில் இருக்கும் நோயாளியிடம் கூட நகைச்சுவையாய் சிரித்து பேசும் மருத்துவர்களை கண்டிருக்கிறேன். சீமாச்சுவின் பார்வையில் அந்த மருத்துவர்களும் பொறுப்பில்லாதவர்கள் போலும்.

*****

நீங்கள் தொகுத்தளித்த அன்புவின் பேச்சில் இருந்தே பிரச்சினையையும் அதன் தீவிரத்தையும் தேவையான அளவு அயல் நாட்டு அறிஞர்கள் மற்றும் கொடையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் என்றே தெரிகிறது.

//""அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவையுடன்" பேசினார் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு பொறுப்புள்ள படித்த இந்தியக் குடிமகன் எழுதுகிறார். !!!!! "//

சிவா இதுவரை வான் கோழியின் ஆட்டம் பார்த்து அலுத்து போனது போல தெரிகிறது. இப்போதுதான் மயிலாட்டம் கண்டுள்ளார்.

வான் கோழியின் ஆட்டம் = SSLC தாண்டாத ஜெயாவின் அழகு ஆங்கிலம்.
மயிலாட்டம் = Dr.அன்புமணியின் அழகு ஆங்கிலம்.

reference:
கானமயிலாட கண்டிருந்த வான்கோழி
தானுமதுவாகப் பாவித்து தானுந்தன்
பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி

-வேல்-

குழலி / Kuzhali said...

//இந்தியர்களின் சுகாதாரத்தின் மேல் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஒரேஒரு கருவிக்காவது பொறுப்பேற்க வேண்டும் என்று பொறுப்புடனும் ஆதங்கத்துடனும் கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு ஆயிரம் கருவிகளுக்காவது நன்கொடை வந்திருக்காதா? நான் மட்டுமே ஒரு பத்து கருவிகளை நிறுவ நன்கொடை வசூலித்திருக்க முயலமாட்டேனா? //

விடுங்க சீமாச்சு, அமைச்சர் அன்புமணி சொல்லிதான் செய்யனுமா என்ன? வேலை நிறுத்தத்துக்கு சம்பளம் கொடுக்க கூடாதுனு அமைச்சர் சொன்னா நீதி(?)மன்றம் போய் சம்பளம் வாங்கிக்குறோம், நம்ம வேணுகோபாலை பதவியை விட்டு நீக்குனா அதுக்கும் நீதி(?)மன்றம் போய் தடை வாங்குறோம், இதிலெல்லாம் அமைச்சர் அன்புமணி சொல்றதை கேட்கலை நாம, இப்போ மட்டும் அன்புமணி வந்து சொல்லனுமா? நீங்களே சொன்னமாதிரி அந்த பத்து கருவிகளுக்கு முயற்சி செய்யுங்களேன், அன்புமணி சொல்லும்வரை காத்திருக்காமா....

சீமாச்சு.. said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

In major seminars, it is an accepted practice to float some humor to make the audience to follow the lecture.

A good speaker will always use this method. Anbumani has used this technic which shows that he is a good speaker and we should appreciate him. Since he is making a speech on AIDS, he can’t cry in the seminar at the fate of his fellow countrymen 

Your post was written in haste without analyzing his speech. I listened to his speech which was indeed professional.

I would rate him next only to Chidambaram among the ministers from TamilNadu in the present Cabinet

So, let's keep aside our bias and appreciate him.

I hope you will publish this comment

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சீமாச்சு.. said...

அன்பின் D the D,
அன்புமணியின் முழுப்பேச்சின் வீடியோவையும் பார்த்தேன். சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் தெளிவான முறையில் பேசியுள்ளார். பதிவில் பின் குறிப்பும் தரப்பட்டுள்ளது.

எனினும் கல்வெட்டு அவர்களின் இந்தக் கருத்துடன் கூடிய கவலையுடன் ஒத்துப் போகிறேன்.

கல்வெட்டு -- Comment Starts

:சிவா,
//இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார்.//

//எனது சக நண்பர்கள் பலர் மெத்த படித்தவர்கள், அதாவது இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்று விட்டு பின்னர் அமெரிக்காவிலும் படித்தவர்கள் பலர், வாரிசு அரசியலையும், சாதியை முன் வைத்து (தலித் தவிர)அரசியல் பண்ணுவதை கடுமையாக விமர்சனம் பண்ணும் பலர் மத்திய அமைச்சர் அன்பு மணியின் பேச்சை ரசித்துவிட்டு,அய்யா இராமதாசு தன்னுடைய மகனைப் பற்றி பெருமைப் பட்டு கொள்ள முழுத் தகுதி உண்டு என சொன்னார்கள்.//


இதே ..இதேதான் மெத்தப் படித்த உங்க நண்பர்களுக்கும் அண்ணா,கலைஞர் போன்றோரின் தமிழ்ப் பேச்சைக் கேட்டு இரசித்து அதனையே ஓட்டாக போட்ட சாதாரண தமிழனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.ஆங்கிலம் தெரியாத அழகுத் தமிழில் பேசத் தெரியாத காமராஜ் போன்ற மக்கள் தலைவர்களும் அவர் வழி வந்த மற்றவர்களும் காணாமல் போனதற்கு தமிழனின் இந்த குணம் காரணம்.

1.இந்தியாவில் வளர்ந்து வரும் எயிட்ஸ் நோய்க்கு அன்புமணி முன்னின்று செயல்படுத்திய ஒரு நல்ல திட்டத்தைக் கூற முடியுமா?
மதுரைக்கு அருகே எயிட்ஸ் நோயாளிகளுக்காகவே நடத்தப்படும் ஒரு மருத்துவமனையின் செவிலியரிடம் சமீபத்தில் பேசினேன்.இந்தியா எப்போது ஒளிரப்போகிறது என்று தெரியவில்லை.இது இவரது துறைதானே? பேசினால் மட்டும் போதாது.

2.இவர் மட்டும் அல்ல சிதம்பரமும் வெளிநாட்டில் நன்றாகவே பேசுவார். பேசுவதைக் கண்டே புல்லரித்துப்போக வேண்டாம். சமீபத்திய தேர்தலில் சிதம்பரம் " இனிமேல் சிவகங்கை என்ற சன்னலின் வழியாக இந்தியாவைப் பார்ப்பேன்" என்று டயலாக் விட்டார். இவர் இதுவரை சிவகங்கை போன்ற ஊர் மக்களுக்கு என்ன உருப்படியான திட்டம் தீட்டினார். வாய்ஸ் ஆன் விங்ஸ்,sreegopi(http://www.pkblogs.com/sreegopi/),அசுரன் (http://pkblogs.com/poar-parai) போன்றோரின் பதிவுகளையும் படிக்கவும்.

3.அன்புமணியின் ஆழமான அறிவினால் அல்லது அவரின் அழகு அங்கிலப் பேச்சினால் ஒரு சாதரண மனிதனுக்கு அல்லது ஒரு எயிட்ஸ் நோயாளிக்கும் என்ன நன்மை என்று சொல்லவும்.

பி.கு:
உலக அரங்கில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு சிறப்பாக பேசி பிறரின் கவனத்தைக் கவரும் அன்புமணி,சிதம்பரம் போன்றோர்களுக்கு எனது ஆதரவு உண்டு. இருந்தாலும் அவர்கள் தனது நாட்டில் என்ன செய்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும்.
--- கல்வெட்டு கமெண்ட் Ends

சீமாச்சு

சதுக்க பூதம் said...

சின்ன அய்யா! நீங்க மட்டும் இங்கலிபிசு படிச்சுக்கிறிங்க.பையனுக்கு
இந்தி படிக்க வைக்கிறீங்க.ஆனா எங்கள தமிழ் மட்டும் படிக்க கூடாதுன்னு சொல்றிங்க.
அப்புறம் உங்க போராட்டத்துக்கு மரம் வெட்ட ஆள் கிடைக்காதுன்னூ பயமா?
பி.கு:நான் Jaya TVல வேலை செய்யல.