"நம்ம நடராஜ் ஆக்ஸிடெண்ட்லே இறந்துட்டானாம் டா..", இரவு முழுவதும் NIC யில் வேலை பார்த்து விட்டு வந்துவிட்டு.. காலையில் கதவைத்திறந்த என் நண்பன் சொன்னான்.
"எந்த நடராஜு? நம்ம நடராஜா? எப்படி? என்ன ஆச்சு?", வழக்கமாகவே கதை விடும் நண்பன் சொல்வதும் பொய்யாக இருக்கக் கூடாதா என ஒரு ஆதங்கத்துடனும் அழுகையுடனுமே கேட்டேன்.
"ஆமாம்.. நம்ம நடராஜே தான்.. வேலூர்-லே தான்.. நேத்து சாயங்காலம் .. லைப்ரரி புக் ரிடர்ன் செய்துட்டு வரும் போது.. ஃபுட் போர்ட்லேருந்து ஸ்லிப் ஆகி விழுந்துட்டானாம்..."
"பின் சக்கரம் வயித்துல ஏறிடிச்சாம்.. நேத்து நைட் கம்ப்யூட்டர்ல மெட்ராஸ் NIC லேருந்து தட்டிக்கிட்டே இருந்தானுங்க... ராத்திரி முழுக்க அழுது தீத்துட்டேன்..."
ரொம்ப சோகமாயிட்டேன்.... நான் என் நிலைக்கு வர சில வாரங்கள் ஆயிடிச்சி..
oOo oOo
இறக்கும் போது நடராஜுக்கு 26 வயசு.. கை நிறய்ய சம்பளம் வாங்கும் வேலை.. அப்பொழுதுதான் தொடங்கப்பட்டு மாவட்டம் தோறும் கிளை பரப்பிக் கொண்டிருந்த மத்திய அரசின் NIC (National Informatics Center) (ராஜீவ் காந்தியின் கனவு நிறுவனம்) யில் வேலூர் மாவட்டத்தில் தலைமைப் பதவி.. மாவட்ட கலெக்டரின் அறைக்கு அடுத்த அறை அவன் அறை தான்.. எப்பொழுது வேண்டுமானாலும் கலெக்டரைச் சந்திக்கலாம்..
காதலித்தவளையே கல்யாணம் கட்டி அன்றுடன் 126 நாளாகியிருந்தது...
ஆடி மாதம் கழிந்து குடித்தனம் வைக்கலாமென்று மயிலாடுதுறையிலிருந்து ஆசை மனைவியும் குடும்பத்தாரும் சீர் செனத்திகளோடு முதல் நாளிரவு தான் வந்திறங்கியிருந்தார்கள்... கொண்டு வந்த மூட்டைகளின் கட்டு கூட இன்னும் பிரிக்கவில்லை....
மாப்பிள்ளை உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி கட்டி வாங்கிக் கொண்டுச் சென்றார்கள்...
oOo oOOo
நடராஜ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்....
நான் B.Sc and M.Sc கணிதம் படிக்கும் போது எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல படிப்பாளி.. Calculus, DIfferential Equations, Classical Mechanics எல்லாம் தலைகீழ் பாடம்.
B.Sc., கணிதத்தில் கல்லூரியில் முதலிடம்.. M.Sc., கணிதத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாமிடம்.. எது கேட்டாலும் பொறுமையாக்ச் சொல்லித் தருவான்..
M.Sc முடித்துவிட்டு.. அண்ணாமலையில் PGDCA .. பெங்களூர் IISc (Indian Instititute of Science)-ல் Master of Engineering (Computer Science) முடித்தவர். அந்தக் காலத்தில் மாயவரத்தில் ME என்பதெல்லாம் ரொம்ப அதிகம்.. நிறைய்ய பேர் பார்க்க முடியாது.. ஊருக்கே ஒருத்தர் ரெண்டு பேர் தான் இருப்பாங்க...
oOo oOo
1986, 1987 ஜூனில் நாங்களெல்லாம் வேலையில்லாப் பட்டதாரிகள்.. சொல்லிக்கொள்ளும் படியான நிரந்தர வேலையில்லா விட்டாலும் படித்த கணிதம் சோறு போட்டது. +2 மற்றும் B.Sc மாணவ/மாணவிகளுக்கு டியூஷன் எடுத்துக் கொஞ்சம் டீ/சிகரெட் குடிக்கக் காசு பார்த்துக் கொண்டிருந்தோம்
1987 ஜூலையில் நான் IIT Kharagpur M.Tech படிக்கச் செல்ல மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயிலேறிக் கொண்டிருந்த நேரம்.. அரக்கப் பரக்க ஓடிவந்து..
"இங்க வா மாப்பிள்ளை... இந்தா இதுல 300 ரூபா இருக்கு.. இப்பத்தான் டியூஷனில் வசூலாச்சு.. நீயும், வெளியூர்/வெளிமாநிலம் போயி IIT-ல படிக்கப் போற... படிச்சு எப்படியும் பெரிய ஆளாயிடுவே.... எங்களையெல்லாம் மறந்துராதரா..."
கட்டித் தழுவி அன்போடு சொல்லிச்சென்ற நண்பன் முகம் மறக்கவில்லை.. அவன் சொல்லிச் சென்ற சொற்களும் மறக்கவில்லை....
அவன் போய்ச் சேர்ந்து தான் இன்றோடு 18 வருடங்களாயிடிச்சி... அவன் நினைவுகள் மட்டும் எப்பொழுதும் மடை திறந்த வெள்ளமாக.... வற்றியதேயில்லை...