Wednesday, July 30, 2008

68. மேயருக்கு 151 சவரன் தங்க மாலையா????

வேலூர் மாநகராட்சி ஆகப்போவுதாம்..

அதுக்கு ஒரு புது மேயர் பதவி கிடைக்கப் போகுதாம்.. அந்த மேயருக்கு 151 சவரனில் தங்க மாலை பொதுமக்கள் பணத்தில் வசூலித்துப் போடவேண்டுமாம... இது எந்த ஊரு நியாயம்கிறேன்?????? 151 சவரன் தங்க மாலை போட்டுக்கிட்டாத்தான் அவரு மேயரா??

எடுத்ததுக்கெல்லாம் பகுத்தறிவு பேசுபவர்கள்.. இதை ஏன் யோசிக்க மாட்டேனென்கிறார்கள்??

படத்தில் இருக்கும் இந்தப் பொண்ணே தேவலாம் போல இருக்கு.. அப்பா வூட்டுலேருந்துதான் நகை போட்டுக்கிட்டு வந்திருக்கு (அரசியல்வாதி பொண்ணாயில்லாத பட்சத்தில்...)






குமுதம் ரிப்போர்ட்டரில் சுட்டது... படியுங்கள்..



சாரதி மாளிகை என்கிற வணிக வளாகத்தில் உள்ள சங்கத்திடம் இந்த வசூல் ராஜாக்கள், `மாநகர மேயருக்கு 151 சவரனில் சங்கிலி போட வேண்டும். அதற்காகப் பத்து சவரன் தங்கம் தாருங்கள்' எனக் கேட்டு நச்சரித்துள்ளனர். `ஒரு சவரன் மட்டும் தான் தர முடியும்' என்று அந்த சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒப்புக்கொண்டுள்ளார். இதுபோல மார்க்கெட் சங்கத்திடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள். அந்தச் சங்கம் ரூ.50 ஆயிரம் தர ஒப்புக்கொண்டுள்ளது!'' என்றனர் காங்கிரஸார் கொதிப்புடன்.


வேலூர் நகைக்கடைக்காரர்களிடம் மொத்தம் 151 சவரன் தங்கம் கேட்டுள்ளனர். அவர்களோ 51 சவரன் மட்டுமே தர முடிவு செய்துள்ளனர்.அதுதவிர லாட்ஜ்காரர்கள், மணல் திருடர்கள் என்று பலரிடம் வசூல் வேட்டை கனஜரூராக நடந்து கொண்டிருக்கிறது'' என்றனர் அவர்கள்.


லோக்கல் அமைச்சர் துரைமுருகனின் ஆருயிர் சகோதரர் துரைசிங்காரம்தான் விழா ஏற்பாடுகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். முதல்வர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், சேர்மன் ஆகியோரின் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடந்தாலும் கூட அவர்களின் காதுகளுக்கு இந்தத் தகவல் போய்விடக் கூடாது என்பதில் வசூல் திலகங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.


இதுபற்றி சேர்மன் கார்த்தியிடம் பேசினோம்.


``என்ன சார் செய்வது? சின்னச் சின்ன பிரச்னை இருக்கத்தான் செய்யும்? நான் எந்த வசூலுக்கும் போகவில்லை. மற்ற மாநகராட்சிகள் தொடங்கிய போது அந்தந்த நகரத்தில் உள்ள வியாபாரப் பெருமக்கள்தான் மேயரின் தங்கச்சங்கிலிக்குத் தேவையான சவரனை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் வேலூர் வியாபாரிகளும் தாமாக முன்வந்து தங்கம் தரத் தயாராக இருக்கிறார்கள். (தானாத்தர முன்வந்த புண்ணியவான்களே... நல்லாயிருப்பீங்கய்யா நீங்க !! -சீமாச்சு) யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. "

என்று முடித்துக் கொண்டார் அவர்.




Tuesday, July 22, 2008

67. உயிரைத் திருப்பித் தருவேனோ...

1980 களில்.....

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். வழக்கம் போல் நண்பர்கள்
அதிகம். என்னுடன் சுற்றிக் கொண்டிருந்த நண்பர்களில் கண்ண்னும் குருநாதனும் முக்கியமானவர்கள். நாங்கள் மூவரும் சேர்ந்து சுற்றிய இடங்கள் நிறைய.

அப்படி ஒரு நாள் மதிய வேளையில்.. நாங்கள் காவிரிக் கரையோரமாக பொறுக்கிக் கொண்டு திரிந்த போது ஓரு இடத்தில் காவிரி அழகாக ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் அடர்ந்த மரங்கள் ஜன நடமாட்டம் அதிகமாக இல்லாத இடம். ஆபத்துக்களும் அதிகம் இருந்தது தான்.. ஆனால் அதைப் பொருட்படுத்தும் வயதுமல்ல அது..


திடீரென்று ஒர் ஆசை கண்ணனுக்குத் தோன்றியது..


"மச்சி.. இங்க இறங்கி கொஞ்ச நேரம் நீஞ்சிட்டுப் போகலாமே..."

கண்ணனுக்கும் குருநாதனுக்கும் நீச்சல் தெரியுமாதலால்.. அல்லது அது போல் இருவரும் நினைத்துக் கொண்டதால்.. உடனே இறங்கி விட்டனர்..

எனக்கு இது போல் நினைத்த இடத்தில் ஆடை களைந்து குளித்துப் பழக்கமில்லை..

நானெல்லாம் வெறும் கிணத்த்டி.. பாத்ரூம் குளியல் ஆசாமி.. ஓரே பிள்ளை என்ற சுய பாதுகாப்பில்.. அம்மா என்னைக் காவிரிக்குக் குளிக்க அனுப்பியதில்லை... அப்ப்டி அனுப்பினாலும்.. யாராவது அக்ரஹாரத்து மாமாக்கள்.. ஒரு தடவைக்கு நாலு தடவை.. "பயப்படாதீங்கோ மாமி.. நானாச்சு.. உங்க புள்ளையாண்டானாச்சு... பத்திரமாக் கொண்டுவந்து சேத்துடறேன்" என்று உறுதி மொழி கொடுத்தாலும்.. அம்மா..
"ஆக்கூர் சீனிவாசய்யர் புள்ளை காவேரியில குளிக்கும் போது ஆத்தோட போயிட்டான்.. அவர்ட்ட காசு பணம் இருந்தது.. அவர் ஆளு வெச்சு தேடி.. பாடியைக் கண்டுபிடிச்சார்..... நீ ஆத்தோட போயிட்டீன்னா.. என்னால தேடற் வசதியில்லைடா...பத்திரமா வாடா..." என்று ஆயிரத்தெட்டு ஜாக்கிரதை சொல்லி.. அப்புறமும் அரை மனதோட தான் அனுப்புவாள்..

இருந்தாலும் அம்மாவுக்கு சமையலில் மனசு நிக்காது.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு..எல்லா சாமிகளையும் வேண்டிக் கொண்டிருப்பாள்..

அவள் கவலை அவளுக்கு...

பெற்ற வயிறு.. அதுவும் அப்பா டில்லியில் தனியா இருக்கும் போது ..தகப்பனுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே என்ற பொறுப்பும் சேர்ந்து கொண்டது..

இந்த அழகில நான் எங்கே நீச்சல் கத்துக் கொள்வது...

அம்மாவின் வசனங்கள் நினைவில வரவே.. நான் மறுத்துவிட்டேன்..

இருந்தாலும்.. கண்ணன் நச்சரித்துக் கொண்டேயிருந்தான்.. நாங்க பாத்துக்க மாட்டோமா.. வாடா.. வாடா... என்று செமை புடுங்கல்...

மானசீகமாக அம்மாவை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு.. அவள் வேண்டும் தெயவங்கள் என்னைக் காப்பாற்றாதா.. என்ற நப்பாசையுடன்.. நானும் காவிரியில்...


அரை மணி நேரம் தண்ணியில் அளைந்தது.. கொஞ்சம் தைரியம் தர.. நகர்ந்து நகர்ந்து.. ஆழத்துக்கு வந்து விட்டிருந்தேன்.. எனக்கும் கண்ணனுக்கும் 10 அடி தூரம்.,.. எனக்கும் குருநாதனுக்கும் ஒரு 30 அடி தூரம் இருக்கும்.. நான் கூப்பிட்டால் கூட தண்ணிரின் இரைச்சலில் குருநாதனுக்குக் கேட்க வாய்ப்பில்லை..

"கண்ணா.. கண்ணா.. காப்பாத்துடா.. மாட்டிக் கிட்டேண்டா...".. முதல் முழுக்கு...

உடனே வந்து காப்பாற்ற இவன் துவாரகைக் கண்ணனில்லை.. வெறும் மயிலாடுதுறை கண்ணன் தான்.... அவனுக்குத் தெரிந்த நீச்சல் அவனைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே போதுமானது.. இன்னொருவரைக் காப்பாற்றுமளவுக்கு அவனுக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை..

"கண்ணா.. இங்க பாருடா.." -- இரண்டாம் முழுக்கு...

குரு இருக்குமிடம்.. கண்ணில் தெரியவில்லை.. அரை மணி தண்ணிரில் ஆடியதில் கண் சிவந்திருந்தது...

"அம்மா.." -- மூன்றாவது முழுக்கில் நான்.. க்க்கீழே.. போய்க்கொண்டிருந்தேன்..

நதியில் சுழல்...

எப்படித்தான் வந்தானோ.... அம்மா அப்பா செய்த புண்ணியமோ...அந்த தெய்வம் தானறியும்...

பாய்ந்து வந்து என் ஒரு கால் பற்றி.. சுழற்றி.. என்னைக் கரை சேர்த்தவன் குரு..

அந்தத் தருணம் மறக்க இயலவில்லை...

இந்தப் பதிவு எழுதும் போது கூட.. அந்தக் கணத்தின் பயம் வயிற்றில்
பரவுகிறது..

oOo..



வாழ்க்கையில் நாங்கள் சென்ற திசைகள் வேறு வேறு... குருநாதன் பற்றி..எந்த விவரங்களுமில்லை..


சென்ற வாரம்.. யாருடனோ பேசிக்கொண்டிருந்த போது.. தான் அவனனப் பற்றி அறிய நேர்ந்தது....இதயத்தில் இரத்த உறைவு காரணமாக குருநாதன் சென்னை பொது மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகத்தெரிந்தது..

சொன்னவரிடம் செய்தி தான் இருந்ததே தவிர தொலைபேசி எண்களில்லை..

யார் யாரையோ பிடித்து.. அவன் தொலைபேசி வாங்கித் தொடர்பு கொண்டேன்..

அவனுக்கு அல்சர் இருக்கிறதாம்.. அதற்காக சில வ்ருடங்களாக ஏதோ மாத்திரைசாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.. யாரோ மருத்துவர் சொன்னதின் பேரில் அதைதிடீரென்று நிறுத்தி விட்டிருக்கிறான்.. அது அவன் இதயத்தில் blood clot-ல் கொண்டு விட்டது.. இதயத்தின் இடது வெண்ட்டிரிக்க்ளில் ஒரு பெரிய உறைவு..அதன் ஒரு பகுதி இடது காலுக்குச் சென்று விட்டதால்... இடது கால் இயக்கம் இழந்துவிட்டிருந்தது..


அவனிடம் பேசிய போது... அவனுக்கு உயிர் வாழ்வதற்கான ஆசைகள் போயிவிட்டிருந்ததுதெரிந்தது.. மருத்துவத்துக்கு செலவு செய்ய அவனிடமும் அவன் மனைவியிடமும் வசதிகளில்லை...


பேசி முடித்தவுடன் .. என் சென்னை நண்பர்களிடம் உடனடியாகப் பேசி.. அவனை ராமச்ச்ந்திரா மருத்துவமனைக்கு (இதய மருத்துவர் டாக்டர் தணிகாசலம் அவர்களிடம்) அவனைக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்...

எல்லா மருத்துவ செலவுகளும் என் பொறுப்பில் தருவதாக உறுதி தந்து விட்டு.. அவனுக்குச் சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்க எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்..

தினமும் காலையும் இரவும் அவனிடமும் அவன் மனைவியிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்..

அவர்களின் பேச்சில் இப்போது நம்பிக்கை தெரிகிறது.. இன்னும் சிகிச்சைக் குறித்தான முடிவுகள் எடுக்கப் படவில்லை.. ஓரிரண்டு வாரங்களாகலாம்....


சமயத்தில் என்னை அவனிடம் அனுப்பி வைத்த தெய்வம் அவனைக் காப்பாற்றாமலாப் போய்விடும்.....

அவனைக் காப்பாற்றி அவன் மனைவியிடமும் அவன் இரு பெண் குழந்தைகளிடமும் சேர்க்கும் நாளில்.. என் மனம் ஆறுதலடையலாம்...

வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசாமி.. துணை..

Tuesday, July 15, 2008

66. இவர் செய்வது சரியா? நீங்களே சொல்லுங்கள்!!

அண்மையில் சில மணி நேரங்கள் சும்மாக் கழிக்க வேண்டிய பொழுதினில் ஒரு நண்பருடன் இருந்த போது நடந்த ஒரு விவாதம். யார் சொல்வது சரியென்றுநீங்களே சொல்லுங்களேன்..


நண்பரின் தகப்பனாருக்கு (ரிட்டயர் ஆகிவிட்ட ஒரு வக்கீல) இப்பொழுது ஒரு 60 வயதிருக்கும். இறைவன் அருளில் நல்லஆரோக்கியமாகவே இருக்கிறார். குழந்தைகள் மூவரையும (நண்பர் உட்பட) நல்ல முறையில்படிக்க வைத்து மிக அருமையான விதத்தில் செட்டில் செய்து விட்டார்.


காசு பணத்திற்குக் குறைவில்லை... ஆண்டவன் அருளில் குறைகளுமில்லை நிறைவானவாழ்க்கை.. சுக வாசியாக TV பார்த்துக் கொண்டு வாக்கிங் போய்க் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்..


இனி எங்கள் விவாதம்.. சிவப்பு எழுத்தில் இருப்பது நான் பேசியவை...

"ஏன் ராஜா.. உங்க அப்பா இந்த வயசில சும்மாத் தானே பொழுதை ஓட்டிக்கிட்டிருக்கார்..எந்த கவலையும் இல்லை.. இப்ப்டி TV முன்னால பொழுதை வேஸ்ட் பண்றாரே.. நாடு இருக்கிற நிலைமையில இவங்களெல்லாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே.. கொஞ்சம் ஏதாவது சமூக சேவை பண்ணச் சொல்லக் கூடாதா?"


"என்ன பண்ணனும்கிறீங்க.. எதை எடுத்தாலும் அதுல பாலிடிக்ஸ் வந்துடுது.. வீணான பிரச்சினைகளில் தலையிடறதை அவர் விரும்பலை.. வாழ்க்கையில் நிம்மதி போயிடும்னு நெனக்கிறாரு"


"எதுல தான் பிரச்சினையில்ல... பிரச்சினை-ன்னு சொல்லப் போனால் சாப்பிடறது கூட ப்ரச்சினை தான்.. அவர் தான் வக்கீலாச்சே.. அவருக்குத் தெரியாத ப்ரச்சினையா?"


"வக்கீல் தான்.. அதனால தான் அவர் ஒதுங்கி யிருக்கார்."


"ப்ரச்சினை இல்லாத எவ்வளவோ நிறைய வேலைகள் இருக்கே.. 4 பசங்களைப் பிடிச்சி அவங்களை வாழ்க்கையில் நல்ல முறையில் வழி நடத்தலாம்.. அல்லது அவருக்கு இருக்குற இங்கிலீஷ் அறிவுக்கு நிறைய பேருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கலாம்.. நிறைய்ய செய்யலாமே ராஜா"


"நான் எப்படி அவருக்குச் சொல்றது.. அவரைப் பொறுத்த வரைக்கும் அவரோட கடமையைச்செஞ்சு முடிச்சிட்டாரு.. எங்களையெல்லாம் நல்லாப் படிக்க வெச்சு கரை சேத்துட்டாரே.."


"அவர் குடும்பத்துக்கான கடமையைத் தானே செஞ்சாரு.. நாட்டுக்கு என்ன செஞ்சாரு?"


"கவர்ன்மெண்ட் வேலை தான் செஞ்சார்.. அது நாட்டுக்குச் செஞ்சது ஆகிடாதா?"


"காசு (சம்பளம்) வாங்கிக்கிட்டுத் தானே செஞ்சாரு.. அதுக்கு மிஞ்சி கடமை இல்லையா?"


"கடமையைச் செஞ்சிட்டாரு.. அதுவே போதும்னு நெனக்கிறாரு.."

"நான் கடமையை செஞ்சே முடிக்கலை-ன்னு சொல்றேன்.. நீ செஞ்சிட்டாரு.. செஞ்சிட்டாருன்னா என்ன அர்த்தம்.. நாடு இருக்குற நெலமைல எல்லாரும் கடமைன்னு நினைக்கிறதுக்கு மேல் செஞ்சாத்தான் நாடு முன்னேறும் ராஜா..."

"நான் யாரையும் கடமைக்கு மேல செய்யணும்-னு எதிர் பார்த்ததில்லை.."


"நெஜம்மாவே வா?"


"ஆமாம்... "

"என்னிக்க்காவது போஸ்ட் ஆபீஸ்லயோ.. பேங்க் லேயோ கியூவில் நின்னிருக்கியா?"


"நின்னிருக்கேனே.."

"அப்போ 11:30 மணிக்கு க்யூவில நிக்கும் போது திடீர்னு கவுண்டர் க்ளார்க்கு காஃபி டயம்-னு சொல்லிட்டு கதவை மூடிக்கிட்டுப் போகும் போது .. "இவ்வளவுபேரு க்யூவில் நிற்கும் போது இவனுக்கென்ன காஃபி-ன்னு" கோபப்பட்டிருக்கியா?"

பட்டிருக்கேன்.. கடுப்பா வரும்.. என்ன பண்றது அவங்க அப்படித்தான்...


"கவுண்டர் க்ளார்க்கைப் பொறுத்த மட்டில் 11:30 - 12 :00 காஃபி குடிக்கவோ அல்லது அவர் விரும்பிய வேலைகள் செய்யவோ அவருக்கு அதிகாரம் இருக்கு.. அதுக்குத் தான் அவருக்குச் சம்பளம்.. அந்த நேரத்திலும் அவர் வேலை பார்க்க வேண்டுமென்று நீ எதிர் பார்த்ததில் .. அவர் கடமைக்கு மேல் செய்ய வேண்டு மென்று எதிர் பார்ப்பது ஆகாதா? இந்தியாவில் 58 வயசுக்கு மேலே ரிட்டயர் ஆகிட்டு நல்ல ஆரோக்கியத்தை வெச்சுக்கிட்டு சும்மா உட்கார்ந்துக்கிட்டு வெட்டிப் பொழுதைக் கழிக்கிற கூட்டம் ஒண்ணு இருக்கு.. அவங்களெல்லாம் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சா ஒரு பெரிய மாற்றம் கிடைக்குமே..


"செய்யலாம் தான்.. என்னால எங்க அப்பாவை இதெல்லாம் செய் னு சொல்ல முடியாது.. நீங்க வேணுமுன்னா சொல்லிப் பாருங்க.. ஆனா கேக்க மாட்டாரு,,"

"எங்க அப்பாவுக்கு 90 வயசாறது.. நான் அவரையே.. ஏதாவது எடுத்துப் போட்டுக்கிட்டுசெய்யக் கூடாதா-ன்னு சொல்லி.. இப்பல்லாம் அவர் வயசுக்கு நிறையவே செய்யறாரு..உங்க அப்பாவுக்கு சொல்வத்ற்கு உன்னைத் தவிர வேற சரியான ஆள் கிடையாது..சொல்லிப் பாரு.. உன்னால முடியலைன்னா.. நான் சொல்றேன்..."


நண்பர் அரை மனதுடன் சம்மதித்தாலும்.. செய்வாரென்று தோணவில்லை..

நான் இதை பத்தி என் BLOG-ல் எழுதி உங்கள் கருத்துக்களையும் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியுள்ளேன்..

நீங்களும் தான் சொல்லுங்களேன் !!!!

கீழே உள்ள படம் அவருக்காகத்தான்.. சில சமயங்களில் இவ்வாறு செய்யுங்கள் என தந்தைக்கு மகன் சொல்வது தவறாகாது.. சொல்ல வேண்டிய நேரங்களில் சொல்லாமல் இருப்பது தான் தவறு..

"செயத்தக்க அல்ல செயக்கெடும்.. செயத்தக்க

செய்யாமை யானும் கெடும்"

என்று என் வள்ளுவர் தாத்தாவே சொல்லியிருக்கார்..





படம்: ஓடம் ஒரு நாள் வண்டியில் போனால் தவறில்லை தான்....

Thursday, July 10, 2008

65. வேலை பார்க்கும் போது படித்துத் தான் தீரணுமா?

முதலில் ஒரு சின்ன ஜோக்.. பழசுதான்.. இருந்தாலும் இந்த இடத்துக்குப் பொருந்துகிறது..

ஒரு அலுவலகத்தில் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பெரிய வி.ஐ.பி யின் சிபாரிசில் இண்டர்வியூவுக்கு ஒரு பையன் வந்திருந்தான். பையனின் தகுதிகளைப் பார்த்த போதே.. இவன் சிபாரிசின் பலத்திலே மட்டுமே வந்திருக்கிறான் என்று புரிந்து விட்டது. சரி, சம்பிரதாயமாகவாவது சில கேள்விகள் கேட்போம் என்று கேட்ட கேள்விகளுக்குக் கூட சரியான பதில்களைப் பையனால் சொல்ல இயலவில்லை..

கடைசியில் ஒரு கேள்வி. ரொம்ப எளிதுதான்.. "காஃபி" என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் சொல்லுங்கள்... ( முழுவதும் சரியாகச் சொல்லாவிட்டாலும் .. பையன் (VIP சிபாரிசு ஆயிற்றே..) ஒரே ஒரு எழுத்தாவது சரியாக சொல்லி விட்டால் அவனுக்கு வேலை கொடுத்து விடலாம் என்று எண்ணம்..)

நிதானமாக யோசித்துப் பையன் சொன்ன பதில்..


K..A...P....H....I

oOo

அதை விடுங்கள் அது ஒரு ஜோக்குதான்..

சில மாதங்களுக்கு முன் என் அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவைப் பட்டது.. IT .. தான் Java, Oracle. கொஞ்சம் மட்டும் தெரிந்திருந்தால் உடனே வேலை..

இண்டர் வியூவிற்கு ஒருவர் வந்திருந்தார்.. சுமார் 35 வயதிருக்கும்... சமீபத்தில் வேலை இழந்த்திருந்தார்.. புள்ளைக் குட்டிக்காரர்.. விரைவில் வேலையில் சேரவேண்டுமென்பது அவர் நிர்ப்பந்தம்.. சேமிப்பு கரையத் தொடங்கியிருந்தது...


ஐ.டி யில் 12 வருடங்கள் குப்பை கொட்டியதாக ஜாதகம் (resume) சொன்னது. .. அவர் பெயரில் ஒரு வித தெலுங்கு வாடை வீசினாலும்.. அவரே தனக்குத் தமிழ் தெரியும் என்று சொன்னார்.. என் பெயரிலிருந்து அவர் நான் தமிழாக இருக்கும் என்று ஊகித்துக் கொண்டு அவரே முன் வந்து சொன்ன செய்தி.. (இதெல்லாம் நாங்கள் இண்டர்வியூவில் கேட்கக் கூடாது.. அவரே சொன்னாலும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பது எங்கள் அலுவலக் நியதி..)



"நம்ம தமிழ் ஆளாச்சே.." எடுத்துக் கொள்ளலாம்.. எப்படியும் 12 வ்ருஷ அனுபவத்தில் 7 வ்ருஷம் OB அடித்ததாக எடுத்துக் கொண்டாலும் மிச்ச 5 வ்ருஷம் solid experience இருக்கும்.. வேலைக்கு எடுத்து விடலாம் என்று தான் நினைத்தேன்.. கேள்விகளை.. சின்னச்சின்னதாக எளிதாகக் கேட்டாலும்..



"அதெல்லாம் எப்பவோப் படிச்சது சார்.. மறந்து போயிடிச்சி.. உங்களுக்கு எப்ப்டி இதெல்லாம் நினைவிருக்கு " என்று அப்பாவியாகக் கேட்டார்..


"அதனாலென்ன பரவாயில்லை" யென்று அவர் வேலை பார்த்ததிலிருந்து கேட்டால்.. அதற்கும் அவர் சரியான பதில் சொல்ல இயல்வில்லை..


"நீங்க ப்ரொக்ராம் கொடுங்க சார்.. பண்ணிடுறேன்.. இந்த மாதிரி கேள்வி கேட்டால் .. டக்க்குனு பதில் சொல்ல முடியலை சார்.." என்றார்..


"டக்குனு எல்லாம் சொல்ல வேண்டாம்.. கொஞ்சம் யோசிச்சாவது சொல்லுங்களேன்... அவ்வளவு சரியான விடை கூட வேண்டாம்... கொஞ்சம் நெருக்கமாக வந்தால் கூட போதும்... ஒரு ப்ரச்சினை (troubleshooting) யின் போது நீங்கள் எந்தெந்த கோணத்தில் சிந்திக்கிறீர்களென்பது தான் முக்கியம்.. சரியான் விடை முக்கியமில்லை" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன்.. (நம்ம தமிழ் ஆளாச்சே..)


ஹூஹூம்... கடைசி வரை அவர் நிலைமை KAPHI கதை தான்..


பன்னிரெண்டு வருடங்கள் வேலை அனுபவமிருந்தும்.. அவர் எதுவுமே தியரி யோ அல்லது முன்னேற்றமோ படிக்க முயற்சி பண்ணவில்லை என்று தெரிந்தது... கேட்டால் நேரமில்லை என்றுதான் சொல்லியிருப்பார்.. கேட்டிருக்கவும் முடியாது.. இண்டர்வியூ சமயங்களில் தேர்வாளராக இருக்கும் போது என்ன வார்த்தைகள் பிரயோகிக்கிறோம் என்பது முக்கியம்.. ஏதாவது கேட்டால்.. அது நம் மீதே.. ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டதாக வழக்கு சந்திக்க நேரிடும் (அது தனிக் கதை..)


மனதில் வலியுடன் தான் அவரை அனுப்ப வேண்டியிருந்தது....

oOo

இப்போ மனதுக்கு இதமாக இந்த செய்தி.. இன்றைய தினமலரிலிருந்து.....

ஆமதாபாத் நூலகத்தில், அறைகளைக் கூட்டி, சுத்தம் செய்யும் பியூனாக வேலையில்சேர்ந்தார் அவர்; சும்மா இருந்த நேரங்களில் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தார்;அடுத்த சில ஆண்டுகளில் பட்டதாரி ஆனார்; பின் நூலகருக்கான சர்ட்டிபிகேட்படிப்பையும் முடித்தார். இப்போது அவர், நூலகராகவும் ஆகிவிட்டார். அவர் தான் கங்காராம வகேலா; குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நூலகத்தில் பணியாற்றிவருகிறார்.



நூலகத்துக்கு பியூன் வேலைக்கு ஆள் தேவையென்று 1981 ஆம் ஆண்டு விளம்பரம்பார்த்து விண்ணப்பித்தார் வகேலா. தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்தார்; தினமும்அறைகளை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்து, புத்தகங்களை அந்தந்த பிரிவுகளில்அடுக்கி வைக்க வேண்டும். தினமும் இதைச் செய்து வந்தவருக்கு சும்மா இருந்தநேரத்தில் புத்தகங்களைப் பிரித்துப் பார்க்கத் தூண்டியது. சில முக்கிய புத்தகங்கள்வேண்டுமானால் வகேலாவைக் கேட்டால் கிடைக்கும் என்ற அளவுக்கு அனுபவத்தைவளர்த்துக் கொண்டார்.


நூலகத்தில் உள்ள மற்றவர்கள் ஊக்கம் கொடுத்ததால், உள்ளூர் கல்லூரியில் குஜாராத்திஇலக்கியத்தை முக்கிய பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்தார்; அதில் படித்துத்தேர்ச்சியும் பெற்றார். அத்துடன் நிற்காமல் நூலகருக்கான சர்ட்டிபிகேட் கோர்சிலும் சேர்ந்து, அதையும் பெற்றார். இந்த நிலையில் 1998 ல் நூலகர் பிரகாஷ் ஓய்வு பெற்றார்அவர் சொன்னதன் பேரில் வகேலாவை தற்காலிக நூலகராக அமர்த்தினர் உயர்அதிகாரிகள். இப்போது அவர் நூலக புத்தகங்களை கம்பியூட்டர் மயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு விடுகிறார்..

Tuesday, July 08, 2008

64. பள்ளி மாணவிகளுக்கு உதவும் தொழிலாளி....

கழிவறை சுத்தம் செய்து பெற்றோரை இழந்த மாணவிகளுக்கு உதவும் தொழிலாளி



கோவை: குடும்பத்தைக் காப்பார்ற வெல்டிங் வேலை; பெற்றோரை இழந்த பள்ளிமாணவிகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்க கழிவறை சுத்தம் செய்யும் வேலை என், இரண்டி வேலைகளை செய்து குடும்பத்துக்கும், பள்ளி மாணவிகளுக்கும் உதவி வருகிறார்,கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த திரு லோகநாதன். இவரது மனைவி சசிகலாதேவி,குடும்பத் தலைவி, மகன் சிவகுரு பி.காம் படிக்கிறார். மகள் அன்னபூரணி, நான்காம்வகுப்பு படிக்கிறார்,
காலையில் இருந்து மதியம் 1 மணி வரை வெல்டிங், கேஸ் கட்டிங் வேலைகளைச்செய்யும் லோகநாதன், 1:15 மணிக்கு மதிய உணவை முடித்து விடுகிறார். மீதியுள்ள45 நிமிடங்களில் அருகிலுள்ள வீடுகள், நிறுவனங்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்கிறார். மீண்டும் வெல்டிங் வேலைக்கு மதியம் 2 மணிக்குத் திரும்பிமாலை 6 மணிக்கு வேலையை முடிக்கிறார். பிறகு மாலை 6 மணிக்குப் பல வீடுகளுக்குச்சென்று கழிவறைகளை சுத்தம் செய்கிறார்.
வெல்டிங் வேலையில் மாதம் ஆறாயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறாது. இந்தச்சம்பளத்தை குடும்பத்துக்கு ஒதுக்கி விடுகிறார். கழிவறை சுத்தம் செய்யும் வேலையில்கிடைக்கும் வருமானத்தைத் தனியே சேமிக்கிறார். சில மாதங்களாகச் சேகரித்துவைத்த ஐந்தாயிரம் ரூபாயை, கோவை காந்தி மாநகரில் உள்ள சமூக நலத்துறைக்கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சத்யா அம்மையார் நினைவு அரசு காப்பகத்துக்குவழங்கினார். இந்தப் பணத்தை, காப்பகத்தில் தங்கியுள்ள 10 வது பிளஸ் 1, பிளஸ் 2படிக்கும் மாணவிகளுக்கு, "கைடு" வாங்க பயன்படுத்துமாறு கூறினார்..

இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட காப்பகக் கண்காணிப்பாளர் கிரிஜா,காப்பகத்தில் உள்ள 47 பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடு வழங்கினார்.கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில்நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் லோகநாதனை கலெக்டர் பழனிக்குமார் பாராட்டினார்.
லோகநாதன் கூறுகையில் "உழைத்துக் கிடைக்கும் வருமானத்தில், பெற்றோரை இழந்தகுழந்தைகளின் படிப்புக்கு உதவுவதில் இருக்கும் மன திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்றார்.
அன்பு லோகநாதன் அவர்களே.. உங்கள் சேவைக்குத் தலை வணங்குகிறேன்..
லோகநாதன் அவர்களின் சேவையை பெருமையுடன் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட தினமலருக்கு நன்றி..
.திரு லோகநாதன் அவர்களின் முகவரி.
திரு லோகநாதன்
எஸ். எம் இஞ்ஜினீயரிங்
697 ராமநாதபுரம்
கோவை 45
போன்: 99526-21150

63. உதவிய நெஞ்சங்களுக்கு உளமார்ந்த நன்றி...



சென்ற வாரம் முழுவதும் ஒரு பிரளயமாகப் போய்விட்டது. மனைவியின் நெருங்கிய உறவினர்.. படிப்பதற்காக அமெரிக்கா வந்த இளைஞர், எதிர் பாராத முறையில் மரித்து விட.. அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலையில்.... என்ன செய்வதென்று தெரியாமல்.. திகைத்து நின்றேன்..



உடனடியாகத் தோன்றியது நமது பதிவுலக நண்பர்கள் தான்.. கேள்விப்பட்டவுடன்.. அனைத்து நண்பர்களும்.. எனக்குத் தொலைபேசி.. தேவையான உதவிகளைச் செய்து தந்தனர்.



மறைந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் ச்டங்குகள் அவரது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க ஆஸ்டின் நகரிலேயே நடத்தப்பட்டது...



உதவிய உள்ளங்களுக்கு நன்றி.. அனைவரையும் தொலைபேசியில் அழைத்து என் தனிப்பட்ட நன்றியைச் சொல்வேன். அதற்கு முன்.. இந்தப் பதிவு..





நிறைய நண்பர்கள்.. இவர்களை நண்பர்களாகப் பெற்றது.. இறைவன் செயல்..



செய்தியைச் சொன்ன உடனேயே.... பதிவெழுதி..சுவரொட்டியிட்ட கேஆரெஸ்..



பதிவைப் பார்த்த உடனேயே.. இரவு பதினோரு மணிக்கு மேலும் போன் செய்து நண்பர்களின் தொடர்பு தந்த அருமை நண்பர் டாக்டர் வீயெஸ்கே,



நண்பர்கள் தொலைபேசியையும் அவர்களிடம் எனது தேவையையும் சொல்லி உதவச்சொன்ன பதிவரும், மயிலாடுதுறை வாசியுமான எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் முத்துக்குமார்..



என் பெயரையே (அவர் பெயரை நான் தான் வைத்துக் கொண்டுள்ளேன்..) வைத்திருக்கும் எங்கள் ஊர்க்காரர் அன்பு வாசன் பிள்ளை, அவர் சகோதரர் நிரஞ்சன் பிள்ளை, அவர் நண்பரும் ஆஸ்டின் நகர சாய்பாபா மைய நிறுவனருமான அன்பு நண்பர் காங்கேயன்,



என்னை அழைத்து.. உதவி தேவையானால் எந்த நேரமும் அழைக்கத் தவறாதீர்கள் என வாக்களித்த் ஆஸ்டின் நகர நண்பர் சீனிவாசன்,



அமெரிக்க சூழல் சார்ந்த ஏராளமான செய்திகளை தந்து உதவிட்ட சக பதிவர் திருமதி பத்மா அரவிந்த், அவரது உறவினர் திருமதி சுஜாதா



வாகன உதவியும், உணவும், ஆறுதலும் அள்ளித்தந்த நண்பர் சேவியர், நண்பர் கணேஷ்குமார்..



இன்னும் நிறைய நல்ல நெஞ்சங்கள்...



இவர்களின் நட்பைப் பெற என்ன தவம் செய்தேனோ....





அனைவருக்கும் மனமார்ந்த் நன்றிகள்...





சோகமான நிகழ்ச்சியாயினும் ஒரு பெரிய அனுபவம் கிடைத்தது.. இது போல நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவெழுதி வைக்க வேண்டுமென்று நினைத்துள்ளேன்..



மனம் இன்னும் ஆறவில்லை.. முடிந்த போது எழுதுகிறேன்...

எங்கள் குடும்ப சோகத்தில் எனக்காக பிரார்த்தித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் !!








Saturday, June 28, 2008

62. எனக்கே ஸ்பீடிங் டிக்கெட் கொடுத்துட்டாங்கோ !!!

***** 29 July 2008 அன்று சேர்க்கப்பட்ட பகுதி...
கோர்ட்டுக்குச் செல்லவில்லை. ஓரு நல்ல (?) அட்டர்னி பிடித்து அவரிடம் கேஸை ஒப்படைத்தேன்.. ஆபீஸ் நேரத்தில் கோர்ட் படி ஏற விரும்பவில்லை... தட்சணை $150/-

அவர் எனக்காக கோர்ட்டுக்குச் சென்று வாதாடி (?) என் ஸ்பீடு டிக்கெட்டை 83 மைல் என்பதை 65 மைல்களாகக் குறைத்து விட்டார்..

கோர்ட்டுக்கு தண்டம் $135/-

மொத்த தண்டம் இதுவரை $285/-

என் ட்ரைவிங் ரிக்கார்டில் 3 பாயிண்டுடன் கணக்கு இனிதே தொடங்கப்பட்டது... இன்சூரன்ஸ்காரன் தண்டம் ஒரு தொடர்கதை..


நீதி: ஓவர் ஸ்பீடு போகாதே.. போனாலும் மாட்டிக் கொள்வது மாதிரி போகாதே !!!

என்க்கு ஆர்வத்துடன் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி..

வக்கீல் முகவரியும் போனும் தந்த நண்பர் விஜய்பாபு கண்ணனுக்கு நன்றி...


**** சேர்க்கப்பட்ட ப்குதி நிறைவுற்றது *************


நாலு நாளைக்கு முன்னாடிதான் யூ ட்யூபில் மேயந்து கொண்டிருந்த போது இந்தியன் படத்தின் இந்த சீனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியன் தாத்தா ஒரு ட்ராபிக்க் சார்ஜெண்ட் -ஐ மடக்கும் காட்சி... இந்தியாவிலே இப்படியெல்லாம் இருக்கே-ன்னு கவலைப் பட்டுகொண்டிருந்தேன்.. இது நடந்தது சென்ற செவ்வாய் இரவில்...








வியாழக்கிழமை காலை..வழக்கம் போல அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.. இரண்டு வருஷங்களாக சென்று கொண்டிருக்கும் பாதை தான்.. ட்ராபிக் கொஞ்சம் குறைச்சலாக இருக்கவே.. ஆக்ஸிலேட்டரை ஒரு அழுத்து அழுத்தி விட்டேன் போலேயிருக்கு.,.

பின்னாலிருந்து சத்தம்.. ரியர் வியூ க்ண்ணாடியில் நீலக் கலர் பல்பு.. நன்கு பார்த்தால் .. டூ-வீலரில் ஒரு போலீஸ் அதிகாரி... இளம் வயது ஆப்ரிக்கன் அமெரிக்கன்..

"அண்ணே உங்களைத்தான்.. கொஞ்சம் வண்டியை ஓரம் கட்டுறீங்களா?"

தலைவிதியே என்று ஓரம் கட்ட வேண்டியதாகிவிட்டது..

அவரும் வண்டியை என் பின்னால் நிறுத்திவிட்டு அருகில் வந்து கண்ணாடியை இறக்கச் சொன்னார்..

"இங்க ஸ்பீடு லிமிட் என்ன-ன்னு உங்களுக்குத் தெரியுமா சார்?"

"55 சார்" - இது நான்..

"I have locked you down at 83 Sir .. Can I get your papers please.."



நான் மணிக்கு 55 மைல் வேகத்தில் போக வேண்டிய ஹைவேயில்.. 83 மைல் வேகத்தில் சென்றிருக்கிறேன்..


வேணும் தான்.,..

வண்டிக்குத் திரும்பிப் போய் ..முழ நீளத்தில் பிங்க் கலரில் டிக்கெட் கொண்டு வந்து கொடுத்தார்.




கஷ்டகாலமே--யென்று..

"எவ்வளவு சார் ஃபைன்? " என்று கேட்டதற்கு..

ஃபைன் எல்லாம் .. 15 மைல் அதிகம் செல்பவர்களுக்குத்தானாம்.. நான் 28 மைல் அதிகம் சென்றிருப்பதால்.. (Mandatory Court Appearance) அவசியம் கோர்ட்டுக்கு சென்று நீதிபதியைச் சந்திக்க வேண்டுமாம.. ஜூலை 28 அன்று காலை 9 மணிக்கு செல்ல வேண்டும்..



குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. 30 நாட்கள் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்வார்களாம்.. கஷடம் தான்..

இது முதல் தடவை என்பதால்.. பாதுகாப்பு பற்றிய வகுப்பில் சேர்ந்தால்.. மன்னிக்கப் படலாம் என்று சொல்கிறார்கள்..

பார்ப்போம்...

ஆமாம்.. உங்களுக்கு யாருக்காவது.. இங்க MLA .. MP .. யாரையாவது.. தெரியுமா???

Tuesday, June 10, 2008

61. எங்க வீட்டுத் தோட்டத்தில் பாவனா...

மேக்கப் இல்லாத பாவனா படம் போடறேன்னு சொல்லி.. வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல.. போட்டிருக்காங்க.. பசங்க கேக்கறாங்களேன்னு.. அவங்க அவங்களுக்குத் தெரியாம மேக்கப் போட்டிட்டு போஸ் கொடுத்துட்டாங்க...





ஆனால்.. எங்க மயிலாடுதுறையில் எங்க வீட்டுக்கு (அவங்க தோழி சரண்யா வோட) வந்த போது.. எங்க மயிலாடுதுறை மாஃபியாவின் வேண்டுகோளுக்கிணங்க.. எங்க வீட்டு ஊஞ்சலில் ஆடிய போது.. நாங்க ஃபோட்டோ எடுத்திட்டோம்..





பாவனா ரசிகர் மன்றம்.. வட அமெரிக்கா வட கேரலைனா.. சார்லட் மாநகர 25 வது வட்டத்தின் சார்பாக இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்..




ஃபோட்டோவை க்ளிக்கி அவங்களின் விசுவ ரூப தரிசனத்தைப் பார்க்கலாம்..






அவங்களே.. மேக்கப்போட...






Thursday, April 10, 2008

60. தமிழாசிரியர் குணமடைந்து வருகிறார்...

எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் - DBTR National Higher Secondary School, Mayiladuturai, Tamil Nadu


குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..




ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...



மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...


ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...



எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...





கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...




oOo




மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..


இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..

கடந்த ஏப்ரல் (2007) மாதத்தில் அவர் உடல்நிலை சரியில்லாதிருந்தார். அவர் பிழைப்பது மருத்துவ ரீதியாக மிகக் கடினம் அவர் இருந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர் குணமடைய வேண்டுமென்று...இவ்வாறு பிரார்த்தித்திருந்தேன்..

//எல்லா மருத்துவ சூழ்நிலைகளையும் தாண்டி.. எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் மீண்டு எழ.. எல்லாம் வல்ல இறைவன்.. திருமருந்தீஸ்வரரின் செல்லப் புதல்வர்.. ஆசிரியர்க்கெல்லாம் முதன்மையான் ஆசிரியர்.. என் மனம் நிறை தெய்வம்.. எல்லோரையும் காத்து நிற்கும் வைத்தீஸ்வரன்கோயில் செல்வமுத்துக்குமரசாமியை வேண்டுகிறேன்...
//

எங்கள் வேண்டுதல் கேட்டு, ஆசிரியர் சீரிய முறையில் குணமடைந்து வருகிறார்.

ஆசிரியரை கடந்த மார்ச் மாதம் 19 -ம் தேதி பாண்டிச்சேரியில் சந்தித்தேன். உடல் நிலை தேறி வருகிறது. இன்னும் பேச் வரவில்லை. எத்தனை பிரபந்த்ங்கள், உபன்யாசங்கள் 30 வருட ஆசிரியர் தொழில்.. இவ்வளவும் பேசிய வாயால்.. இப்பொழுது அட்சரம் உச்சரிக்க இயலவில்லை. அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.




அவரைச் சந்தித்து அவரிடம் மாணவர்களின் பிரார்த்தனைகளைச் சொன்னேன். நமக்காக அவர் நல்ல முறையில் குணமடைந்து வருவார் என நம்புகிறேன்..

(இந்த சுட்டியைத் தந்து உதவிய நம்து சக வலைப் பதிவர் இணைய ஆழ்வார் மாதவிப்பந்தல் KRS அவர்களுக்கு நன்றி )
அப்பல்லோ மருத்துவமனையில் ஆசிரியர் இருந்த போது, எங்கள் (சீமாச்சு, அபிஅப்பா) வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ஸ்பெஷல் உதவிகள் பெற்றுத் தந்த டாக்டர் டெல்பின் விக்டோரியா அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.


Saturday, March 29, 2008

59. தரை தொட்டதுமே ஒரு உதவி....

சென்ற மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து... அவசரமாக மயிலாடுதுறை செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. மிகக் குறுகிய காலத்தில் டிக்கெட் எடுத்து.. அவசர அவசரமாக வேலையில் லீவு சொல்லிவிட்டு உடனேயே ஜெட் ஏர்வேஸில் பயணம்.

ஜெட் என்னவோ நல்ல வசதியாய்த்தான் இருந்தது. Charlotte to Newark NJ to Brussels Belgium to Chennai India. சென்ற முறை எமிரேட்ஸில் சென்றுவிட்டு அதன் வசதிகளைச் சிலாகித்துவிட்டு.. அது போல் இன்னொரு ஏர்லைன்ஸ் வருவது கடினம் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, ஜெட் அதன் மிக அருகாமையில் வந்தது மிக்க மகிழ்ச்சி.. என்ன இருந்தாலும் நம்ம் நாட்டுக்காரர்களாயிற்றே...


பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியத்தில் ஏறியதுமே.. பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த இளம் (ரொம்ப இளம் 15 முதல் 18 வயதுதான் இருக்கும்...) ஐரோப்பிய ஜோடி கண்ணைக் கவர்ந்த்து.. இவ்வளவு ச்சின்ன பையன் + பொண்ணாயிருக்காங்களே.. கூட யாரும் துணைக்கு வரலை போல இருக்கே.. சென்னை தான் வருகின்றார்க்ளோ அல்லது சென்னை வழியாக சிங்கப்பூர், மலேசியா.. ஆஸ்திரேலியா செல்பவர்களாக இருக்குமோ என்று நினைத்தேன்..


அப்ப அப்ப பார்த்ததில் பள்ளிக்கூட மாணவர்களாகத்தான் பட்டது. ஒருவர் விரல் கூட மற்றொருவர் மீது படவில்லை.. ஒரு வேளை சகோதர சகோதரிகளாக் இருக்கும் என்று கூட நினைத்தேன்..

அப்புறம் அவர்கள் பற்றி யோசிக்க முடியவில்லை.. சொந்தக் கவலைகள் வாட்டியது...

விமானம் தரையிறங்கியதுமே.. இறங்க வேண்டிய அவசரத்தில் கவனித்தது.. ஜோடி.. பாண்டிச்சேரிக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. மற்றவர் பேசிக் கொண்டிருந்ததில் கேட்டது.. இரவு 1:15 க்கு விமானம் தரையிறங்கியதுமே.. சென்னை செண்ட்ரல் சென்று அங்கு ஒர் லாட்ஜில் மீதி இரவைக் கழித்து இளைப்பாறிவிட்டு.. மறு நாள் காலையில் பஸ் பிடித்து பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்று சொன்னது காதில் விழுந்தது..

நமக்கென்ன.. என்று விட்டு விட்டாலும்...தமிழ் தெரிந்த நாமே சென்னையில் இந்தப் பாடு படும் போது.. இந்தக் குழந்தைகளை யாராவது ஏமாற்றி விட்டால் என்ன பண்ணுவது என்று உறுத்திக் கொண்டேயிருந்தது.. அவர்களைப் பொறுத்த மட்டில் பாண்டிச்சேரியில் தான் அவர்களின் நண்பர்கள் சந்திக்க முடியும்..

Immigration-ல் நின்று கொண்டிருக்கும் போதும் அவர்கள் கண்ணில் பட்ட போதும் .. நம்மால் என்ன செய்ய முடியும் என்று தான் நினைத்தேன்.. அப்புறம் தான் தோன்றியது... நமக்குத்தான் மயிலாடுதுறையிலிருந்து வண்டி வந்திருக்குமே.. அவர்களை போகும் வழியில் பாண்டியில் இறக்கி விடலாமேயென்று தோன்றியது....


அவர்களைத் தனியே சந்தித்து... "என்னிடம் வாகனமிருக்கிறது.. நீங்கள் பஸ்ஸிலெல்லாம் செல்ல வேண்டாம்.. உங்களை பாண்டிச்சேரியிலேயே இறக்கி விடுகிறேன்.." என்று சொல்லிவிட்டேன்.


இடையில் என்னை அழைக்க வண்டி கொண்டு வந்த மூர்த்தி அண்ணனிடமும் கேட்டுக் கொண்டு விட்டேன்.. "பரவாயில்லை சீனா.. அழைச்சிட்டு வந்திடு.. கார்ல இடம் இருக்கு.. பாண்டில தானே... விட்டுடலாமே...."


அவர்களை நயமாகப் பேசி.. வ்ண்டியில் ஏற்றி பாண்டியில் அவர்கள் நண்பர்களிடம் இறக்கி விட்டு விட்டுத்தான் போனோம்.. (கீழே படத்தில் நான் அவர்களுடன்..)





பெண் (Mirha) ஜெர்மன் பெண்.. பையன் (Felix) ப்ரான்ஸைச் சேர்ந்தவர். இருவரும் வகுப்புத் தோழர்கள்.. இந்தியாவில் சமூக நலப் பணி செய்வதற்காக மூன்று மாத விடுப்பில் வந்திருக்கிறார்கள்..

ஜெர்மன், ப்ரெஞ்ச் பேசுபவர்கள் என்று சொன்னதுமே.. நம்ம டோண்டு மாமா நினைவு வந்து.. அவர் போன் நம்பரை அவர்களிடம் தந்துவிட்டேன்.. இந்த தமிழ்நாட்டில்.. உங்க மொழி பேசி நான் அறிந்த நபர் இவர்தான்.. ஏதாவது தேவையென்றால்.. அவருக்கு போன் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.. பண்ணினார்களா.. என்று தெரியவில்லை....

அப்புறம் தான் தோன்றியது... நாம் நினைக்குமளவுக்கு இந்தியா ஒண்ணும் அவ்வளவு மோசமாக இருக்காது.. இப்பொதெல்லாம்.. நிறைய வெளிநாட்டுக்க்காரர்கள்.. இங்கு பத்திரமாக நடமாடுகிறார்களே... நாம தான் ரொம்ப பயந்துட்டோமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..

நான்கு நாட்கள் கழித்து.. கோவாவில்.. மயக்க மருந்து கொடுத்து.. கற்பழித்து கொலையும் செய்யப்பட்ட இந்த Scarlett Keeling என்ற இந்த 15 வயது பிரிட்டன் தேச பெண்ணைப் பற்றிய செய்தியைக் கேட்கும் வரை...



ஸ்கார்லெட்.. உனக்கு நடந்த வன்முறை பற்றி கேள்விப்பட்டு மிக த்துயரடைந்தேன்... இந்தியா ஒன்றும் நீ நினைப்பது போல கொடூரமான நாடல்ல.. உனக்கு நேர்ந்தது வெறும் விபத்துதான்... இந்தியாவில் என்னைப் போன்ற பொறுப்பு மிக்க இளைஞர்களும் அதிகம்.. எங்களால் உன்னைப் போன்ற குழந்தைகள் பலர் காக்கப் பட்டிருக்கின்றார்கள்...

உன் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.. உனக்கு பாதகம் விளைவித்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தாலும் .. ஆண்டவர் பிடியிலிருந்து தப்ப முடியாதென்று நம்புகிறோம்... இது தான் இந்தியா...

Wednesday, February 20, 2008

58. ஹையா...பாஸ் பண்ணிட்டேன்....


நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த தேர்வில் (Financial Risk Manager from http://www.garp.com) முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று விட்டேன். நண்பர்களின் நல்லெண்ணங்களும் ஊக்குவிப்பும் எனக்கு மிக உதவியாக இருந்தன...
என் பெயருக்குப் பின்னால் இப்பொழுது FRM எனறு போட்டுக் கொள்ளலாம். வெற்றி தந்த ஊக்கத்தில் இன்னும் 3 தேர்வுகளுக்கும் பதிவு செய்து விட்டேன்...
  1. Chartered Alternate Investment Analyst (CAIA) இரண்டு தேர்வுகள். March 2008 and September 2008
  2. Certified in Investment Performance Measurement (CIPM) இரண்டு தேர்வுகள்..April 2008 and October 2008
  3. Chartered Financial Analyst (CFA) மூன்று தேர்வுகள்.. June 2008, June 2009, June 2010
மூன்றிற்கும் படிப்பு இப்பொழுது முழு வேகத்தில் செல்கிறது..
நாமெல்லாம் ஐ.டி துறையில் சாதித்ததைப் போன்று Financial Industry-யிலும் சாதிக்க வேண்டும். ஒரு விக்ரம் பண்டிட் (Citigroup CEO) மட்டும் போதாது.. நம்மில் நிறைய பேர் வர வேண்டும்.. இந்தத் துறையில் நான் நிறைய சீனர்களையும், யூதர்களையுமே பார்க்கிறேன்.
இதிலும் நம் இந்தியர்கள் வர வேண்டுமென்பதே என் அவா..
இந்தத் தேர்வுகள் எழுதுவதற்கோ.. இதில் வரும் வேலை வாய்ப்புகள் குறித்தோ அறிந்து கொள்ள விரும்புபவர்கள், தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும். என்னாலான, என்னிடமுள்ள எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.